தமிழில் உறுதிமொழி; ஆங்கிலத்தில் கையொப்பமா?- எம்.பி.க்களுக்கு தமிழிசை கேள்வி

தமிழில் உறுதிமொழி; ஆங்கிலத்தில் கையொப்பமா?- எம்.பி.க்களுக்கு தமிழிசை கேள்வி
Updated on
1 min read

தமிழில் உறுதிமொழி, ஆங்கிலத்தில் கையொப்பமா என்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மாநில பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த தமிழிசை கூறியதாவது:

''செயற்கையாக ஒரு தமிழ்ப் பற்றை முன்னிறுத்துகிறார்கள். இயல்பாக அவர்கள் அப்படி இல்லை என்பதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பதவியேற்பின் போது பல பேர் தமிழில் உறுதிமொழி எடுத்துவிட்டு, ஆங்கிலத்தில்தான் கையெழுத்து போட்டார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் கொள்கையை நாங்கள் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி செய்வது பாரதிய ஜனதா கட்சிதான். மத்தியிலும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கிறோம். நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதால்தான் இதுபோன்ற திட்டங்களை முன்னிறுத்துகிறோம். எதுவுமே ஜனநாயக முறைப்படிதான் எடுத்துச் செல்லப்படுகிறது.

ஆனால் பாஜக கொண்டுவருகிறது என்ற ஒரே காரணத்துக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் திட்டத்தை சில எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கக்கூடாது''.

இவ்வாறு தெரிவித்தார் தமிழிசை.

எம்.பி.க்களின் பதவியேற்பு நிகழ்வில் தமிழகத்தின் முதல் உறுப்பினராகப் பதவி ஏற்ற திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான கே.ஜெயக்குமார், தமிழில் உறுதிமொழி ஏற்றார். இதை தொடர்ந்து பதவி ஏற்ற அனைத்து எம்.பி.க்களும் தமிழிலேயே உறுதிமொழி ஏற்றனர்.

இதற்காக முன்கூட்டியே அனுமதி பெற்று உறுதிமொழியின் ஆங்கில மொழிபெயர்ப்பை தமிழில் படிக்கும்போது சபாநாயகர் சரிபார்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in