Published : 14 Jun 2019 11:35 AM
Last Updated : 14 Jun 2019 11:35 AM

இனி ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் இடையேயான தொடர்புமொழி இந்தி, ஆங்கிலம் மட்டுமே: தெற்கு ரயில்வே சுற்றறிக்கை

ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் இடையேயான தொடர்பு மொழி இனி இந்தி அல்லது ஆங்கிலமாக மட்டுமே இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே சுற்றறிக்கை ஒன்றை விநியோகித்துள்ளது.

ரயில்வே போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இவ்வாறான உத்தரவைப் பிறப்பிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:

ரயில்வே டிவிஷனல் கட்டுப்பாட்டு அறைக்கும் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் இடையேயான தொடர்பு மொழி இந்தி அல்லது ஆங்கிலமாக மட்டுமே இருக்க வேண்டும். பிராந்திய மொழிகள் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். கட்டுப்பாட்டு அறைக்கும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் இடையேயான தொடர்பின்போது தகவல் புரிதல் குழப்பத்தைத் தவிர்க்கவேஎ இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் இருந்து தெரிவிக்கப்படும் ஒவ்வொரு தகவலும் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு முழுமையாக தெளிவாக சென்றடைவதை உறுதி செய்வது கட்டுப்பாட்டு அறையின் முழு பொறுப்பு.

 

 

 

 

 

 

அதேபோல் ஸ்டேஷன் மாஸ்டர் தான் சொல்லும் தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு முழுமையாகச் சென்றுவிட்டதா என்பதை உறுதி செய்வது அவருடைய முழு பொறுப்பு.

இந்த உத்தரவு அமலுக்கு வருவதை இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மேற்பார்வை செய்வார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமங்கல சம்பவ எதிரொலி:

மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த மே 9-ம் தேதி திருமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை பயணிகள் ரயில் கள்ளிக்குடி நோக்கியும், கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மதுரை பயணிகள் ரயில் திருமங்கலம் நோக்கியும் ஒரே நேரத்தில் புறப்படஅனுமதி அளிக்கப்பட்டது. இந்த இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்தன. கடைசி நேரத்தில் இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்துதவிர்க்கப்பட்டது. ஒருவர் இந்தியிலும், மற்றொருவர் ஆங்கிலத்திலும் தகவல்கள் பரிமாறிக் கொண்டதும், ஒருவர் பேசியது மற்றொருவருக்கு புரியாமல் இருந்ததும் விபத்துக்கு காரணம் என்று கண்டறிப்பட்டது. இதுதொடர்பாக இவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாகவே இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x