

கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
கோடை தொடங்கியதிலிருந்து தமிழகப் பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்தது. கிருஷ்ணகிரி, ஓசூர், ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லையோர பகுதிகளில் இருந்து தற்போது காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன. கோடை வெயில் மற்றும் மழையின்மை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக வருவதை விட தற்போது காய்கறி வரத்து குறைந்துள்ளது. அதனால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ரூ.100-க்கு விற்கப்பட்ட 1 கிலோ பீன்ஸ், நேற்று ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல ரூ.50-க்கு விற்கப்பட்ட அவரைக்காய், நேற்று ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வெங்காயம் ரூ.21, சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் தலா ரூ.55, வெண்டைக்காய் ரூ.30, முள்ளங்கி ரூ.25, முட்டைக்கோஸ், முருங்கைக்காய் தலா ரூ.15, கேரட் ரூ.45 என விற்கப்பட்டு வருகின்றன.
மற்ற காய்கறிகளான தக்காளி, பாகற்காய், கத்தரிக்காய் தலா ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.16, பீட்ரூட் ரூ.30, புடலங்காய் ரூ.20 என விற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, “தற்போதுதான் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் பிறகே, காய்கறி செடிகள் நடவு தொடங்கும். காய்கறிகள் வரத்து அதிகரிக்க குறைந்தது 45 நாட்களுக்கு மேல் ஆகும். அதன் பிறகே காய்கறிகளின் விலை குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.