

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஒரு மாதசம்பளம் வழங்க முடிவெடுத் துள்ளதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவினால் நூற்றுக்கணக்கானோர் மாண்டு போயும், ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடைமைகளை இழந்தும், லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்தும் உள்ளதை செய்திகளின் வாயிலாக பார்க்கும் போதும், கேட்கும் போதும் நெஞ்சம் பதைபதைக்கிறது. இந்தியாவில் ஏற்பட்ட இயற்கை பேரழிவிலேயே இது மிகவும் மோசமான பேரழிவாகும்.
அதில், பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களுக்கு “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற அடிப்படையில் நம்மாலான உதவிகளை செய்ய வேண்டு மென்றும், பேரழிவால் பாதிக்கப் பட்ட ஜம்மு–காஷ்மீர் மாநிலத்திற்கு உதவி செய்திட வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளை ஏற்றும், தே.மு.தி.க.வின் 10- ஆம் ஆண்டு துவக்க நாளான ஞாயிற்றுக்கிழமை (14-ம் தேதி) தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒருமாதசம்பளத்தை பாரத பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக முடிவெடுத்துஅறிவித்துள்ளனர் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
பாரத பிரதமரின் வேண்டு கோளை ஏற்று, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய நாடு நம்நாடு, இந்தியர்கள் அனைவரும் நம் சொந்தங்கள் என்ற உணர்வோடு, தொழிலதிபர்களும், வணிகர்களும், இளைஞர்களும் மற்றும் அனைத்து தரப்பினரும் ஜம்மு–காஷ்மீர் பேரழிவுக்கு நிவாரண நிதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.