Published : 06 Jun 2019 12:53 PM
Last Updated : 06 Jun 2019 12:53 PM

முதல்வரின் ட்வீட்டில் தவறு ஏதுமில்லை: அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

தமிழ் மொழி தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தவறு ஏதுமில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தை வெளியிட்டது. இஸ்ரோ முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் சமர்ப்பித்த இந்த வரைவுத் திட்டத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியை கட்டாயமாக படிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு தமிழகம், கர்நாடகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன.

கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்தி கட்டாயமில்லை என வரைவுத் திட்டத்தில் திருத்தம் செய்து பின்னர் மத்திய அரசு அறிவித்தது. இந்தி பேசாத மாநிலங்களில் விரும்பிய மொழியை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம் என்று அறிவித்தது.

இந்நிலையில் முதல்வர் நேற்று பதிவிட்ட ட்வீட்டில் "மற்ற மாநிலங்களிலும் தமிழை விருப்பப்பாடமாகச் சேர்த்து அங்குள்ளவர்கள் படிக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உலகின் பழமையான ஒரு மொழிக்கு செய்யும் சிறந்த சேவையாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இது சர்ச்சையானதைத் தொடர்ந்து மாலையில் ட்வீட்டை நீக்கினார். இந்நிலையில் இதுகுறித்து நேற்று மாலை செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், ''ஜெயலலிதா இருந்தபோது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதும் எங்களின் கருத்துகளை எடுத்துவைத்தோம்.

முதல்வரின் ட்வீட்டில் தவறு ஏதுமில்லை. அவர் இதுதொடர்பாக கருத்து தெரிவிப்பார். என்னைப் பொறுத்தவரை அவர் சொன்னதில் எந்தத் தவறும் கிடையாது. தமிழ் பல மாநிலங்களில் பேசப்பட வேண்டும். அதற்கு ஒரு வாய்ப்பு நம்மால் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.

மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசின் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கை தொடர்பான நிலைப்பாட்டை தமிழக முதல்வரும் துணை முதல்வரும் கலந்தாலோசித்து முடிவெடுத்து அறிவிப்பர்'' என்றார் பாண்டியராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x