Published : 03 Jun 2019 09:12 PM
Last Updated : 03 Jun 2019 09:12 PM

தமிழ்நாட்டை ஆளலாம் என்ற சிலரின் ஆசைக்கனவு ஒருபோதும் நிறைவேறாது: அதிமுகவின் இஃப்தார் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பேச்சு

தமிழ்நாட்டை ஆளலாம் என்று சிலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசைக்கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளில் தேனி தொகுதியில் மட்டும் வென்றது. 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 9-ல் அதிமுக வென்றது.

இந்நிலையில் தமிழ்நாட்டை ஆளலாம் என்ற சிலரின் ஆசைக்கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார்.

அதிமுக சார்பில் இனிய இஃப்தார் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் பொருளாளர் விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள்,மாவட்டச் செயலாளர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

''பாலைவனத்தில் கடும்வெயிலில், தாகத்தோடு நடப்பவர்களுக்கு தூரத்தில் தண்ணீர் இருப்பது போல தெரியும்.  அங்கே போனால் தண்ணீர் கிடைக்கும் தாகம் தீரும் என்று நம்பி போவார்கள்.  ஆனால் அங்கே சென்ற பிறகுதான் தெரியும், அங்கே நீர் இல்லை, அவர்கள் கண்ணுக்குத் தெரிந்தது, வெறும் கானல் நீர் என்று. என்றுமே தாகம் தீர்க்கும் தண்ணீர், அதிமுகதான் என்று தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை,  ஒன்பது சட்டப்பேரவை இடைத் தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் என்றுமே ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் திண்ணமான எண்ணம். இதனை ஏற்று, அனைத்து சிறுபான்மையின மக்களும், இஸ்லாமிய சமுதாய மக்களும் அதிமுகவுக்கு தங்களது ஆதரவை தந்தார்கள் என்பதைத்தான் ஒன்பது சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் நமக்கு கிடைத்த வெற்றி எடுத்துச் சொல்கிறது.

இன்று விஞ்ஞான யுகம். வாட்ஸ் அப், ட்விட்டர்,  ஃபேஸ்புக், என சமூக வலைதளங்களில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் கருத்துக்களை தடையின்றி எடுத்துக் கூறி வருகின்றனர். அப்படி எல்லா வலைதளங்களிலுமே தேர்தல் முடிவுகளைப் பற்றி ஒரு வாசகம் உலா வந்தது. நல்லவர்களை இறைவன் சோதிப்பான். ஆனால் கைவிட மாட்டான். நம்மை  இறைவனும் கைவிடவில்லை. இஸ்லாமியப் பெருமக்களும் கைவிட மாட்டார்கள்.

இன்னொரு வாசகமும், வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. கெட்டவர்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனால் கை விட்டு விடுவான்.

இப்படித்தான் சிலருக்கு தேர்தலில் நிறைய கொடுத்ததுபோல ஒரு காட்சியை இறைவன் கொடுத்திருக்கிறான், அது கைவிட்டுப்போய்விடும் என்ற தவிப்பில், சிரிக்கக் கூட முடியாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டை ஆளலாம் என்று சிலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசைக்கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஏமாற்றுகிறவர்கள் எப்பொழுதும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். அது அவர்களுடைய இயல்பு, ஆனால், ஏமாறுகிறவர்கள் எப்பொழுதுமே ஏமாந்து கொண்டிருக்க மாட்டார்கள்.  

பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு இஸ்லாமியர்களை மிகவும் நேசித்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவருக்குப் பிறகு இஸ்லாமியர்களை தனது சகோதரர்களாக, சகோதரிகளாக நேசித்தவர் ஜெயலலிதா. அவரின் புனிதப் பாதையில் விசுவாசத் தொண்டர்களாகிய நாங்களும், இஸ்லாமியர்களை நேசித்துக் கொண்டிருக்கிறோம்.  சிறுபான்மை மக்களை நேசித்துக் கொண்டிருக்கிறோம். 

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற உணர்வோடு நேசித்துக் கொண்டிருக்கிறோம், இஸ்லாமியர்களுக்கு என்றுமே பாதுகாப்பு அரணாக இருப்பது, ஜெயலலிதாவின் ஆட்சிதான். இஸ்லாமியர்களுக்கும், எங்களுக்கும் உள்ள உறவு வெறும் தேர்தல் காலத்து  உறவு அல்ல,

உடுக்கை இழந்தவன் கைப்போல - ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்று திருவள்ளுவர் சொன்னது போல, சிறுபான்மையின மக்களுக்கு ஒரு துன்பமென்றால், தடுக்கின்ற கரங்களாக அதிமுக என்றும் இருக்கும்.

சிறுபான்மை மக்களுக்கு ஒரு ஆபத்தென்றால் அவர்களைக் காக்கின்ற கரங்களாக அதிமுகவின் ஆட்சி இருக்கும். பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் எங்களைத் தேடி வருவதற்கு முன்பாகவே, அவர்களைத் தேடி நாங்கள் செல்வோம். பாதுகாப்பு தருவோம்.

ஜெயலலிதாவின் வழியில் சிறுபான்மையின மக்களின் தோழர்களாய் உங்களுடனே இருப்போம். உங்களுக்குத் தோள் கொடுப்போம். உங்களில் ஒருவராகவே வாழ்வோம்''.

இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x