Published : 24 Jun 2019 10:05 PM
Last Updated : 24 Jun 2019 10:05 PM

ஜூன்.28 ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

வரும் ஜூன் 28 அன்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

ஜூன்.28 அன்று திமுக சட்டப்பேரவரை உறுப்பினர்கள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி நடக்க உள்ளதாக கொறடா சக்ரபாணி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 2 ஆம் தேதி கூடியது. இதையடுத்து, ஆளுநர் உரை மீதான விவாதம் ஜனவரி 4 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது.

பின்னர், பிப்ரவரி 8 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், பிப்ரவரி 11 முதல் 14 வரை நடைபெற்றது. அதன் பிறகு, சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்னும் நடைபெறவில்லை.

இதற்கிடையே ஜூன் 28-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 31 வரை கூட்டத் தொடர் நடைபெறும் என ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின் சபாநாயகர் தற்போது அறிவித்துள்ளார்.

மொத்தத்தில் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் ஜூலை 1-ம் தேதி விதிமுறைகளின்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தனபால் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் முதல்நாளான ஜூன் 28 அன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் கலந்துக்கொள்ள வேண்டும் என கொறடா சக்ரபாணி தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையில் எப்படி செயல்படுவது, தமிழகத்தின் முக்கிய பிரச்சினையான குடிநீர் பிரச்சினை, நீட் தேர்வு, விவசாயிகள் நிலை, 7 பேர் விடுதலை, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல பிரச்சினைகளும், மானியக்கோரிக்கைகளில் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

இதுதவிர சட்டப்பேரவைத்தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஜூலை.1 அன்று வருகிறது, அதுகுறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x