

அதிமுகவின் தோல்விக்கு பாஜக தான் காரணம் என, அதிமுக அமைப்புச் செயலாளர் செல்லபாண்டியன் விமர்சித்துள்ளார்.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. ஏற்கெனவே மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், அதிமுகவினர் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுகவின் தோல்விக்கு பாஜக தான் காரணம் என அதிமுக அமைப்புச் செயலாளர் செல்லபாண்டியன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நேற்று (திங்கள்கிழமை) பேசிய செல்லபாண்டியன், "அதிமுக ஏன் தோற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். பாஜக தான் காரணம் என, சின்னக் குழந்தையிடம் கேட்டால் கூட சொல்லும். இது இயற்கை. அதில் மாற்றுக் கருத்து கிடையாது. தனித்து நின்றிருந்தால் அத்தனை இடங்களையும் அதிமுக கைப்பற்றியிருக்கும், அதில் மாற்றுக்கருத்து கிடையாது", என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணனும் கலந்துகொண்டார். அமைச்சர் முன்னிலையில் செல்லபாண்டியன் அதிமுகவை விமர்சித்துள்ளார்.