Last Updated : 21 Jun, 2019 02:45 PM

 

Published : 21 Jun 2019 02:45 PM
Last Updated : 21 Jun 2019 02:45 PM

தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம்; இணையத்தில் வெளியிட அரசுக்கு ஒரு மாதம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு தமிழக அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஹக்கிம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழகத்தில் 7,600 தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 2018- 2021 கல்வி ஆண்டுகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை, தமிழகக் கல்விக் கட்டண நிர்ணயக் குழு இதுவரை நிர்ணயம் செய்யவில்லை. இதனால் பல தனியார் பள்ளிகளில் 2018- 2019 கல்வி ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்டதைக் காட்டிலும் பல மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

இதனால் 2018-2021 ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்து இணையளத்தில் வெளியிட  தமிழகப் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவிற்கு உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த ஆண்டில் விசாரணைக்கு வந்தபோது, தனியார் பள்ளிகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரத்தை ஏப்ரல் மாதத்துக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் கல்விக் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட அவகாசம் கேட்டு அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது 2018- 2021 ஆண்டிற்கான கல்விக் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையேற்க மறுத்த நீதிபதிகள், ஒரு மாதம் மட்டும் அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x