தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பலையா, அதிமுக எதிர்ப்பலையா?- ஆடிட்டர் குருமூர்த்தி விளாசல்

தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பலையா, அதிமுக எதிர்ப்பலையா?- ஆடிட்டர் குருமூர்த்தி விளாசல்
Updated on
1 min read

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை காட்டிலும் அதிக தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. எனினும் தமிழகத்தில் அக்கூட்டணியால் சோபிக்க முடியவில்லை. பாஜக சார்பில் போட்டியிட்ட ஐந்து பேரும்  தோல்வியைத் தழுவினர். இதற்கு தமிழகத்தில் நிலவிய மோடி எதிர்ப்பலையே காரணம் என்று பரவலாகக் கூறப்படுகிறது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தனித்து நின்று 37 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக, இம்முறை ஒரேயொரு இடத்தை மட்டுமே வென்றது.

இந்நிலையில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாஜக ஆதரவாளரும் 'துக்ளக்' பத்திரிகையின் ஆசிரியருமான ஆடிட்டர் ஜி.குருமூர்த்தி, ''5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக 2 தொகுதிகளில் தோற்றது. 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் 5 தொகுதிகள். 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் 5 இடங்களில் தோல்வி அடைந்தது.

அதே வேளையில் பாஜக 2 லட்சத்தைவிடக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 2 இடங்களில் தோற்றது. 3 லட்சத்துக்கும் குறைவான வித்தியாசத்தில் ஓரிடம், 3 லட்ச வாக்குகளுக்கும் அதிகமாக ஓரிடத்தில் தோல்வி.

ஒருவேளை தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பலை இருந்தால், பாஜக வேட்பாளர்கள் 4 முதல் 5 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் அல்லவா தோற்றிருக்க வேண்டும்? எனில் இது யாருக்கான எதிர்ப்பலை?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்ததற்கு மோடி எதிர்ப்பலை காரணமாக இருந்ததாக, அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான 'நமது அம்மா' கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in