

அதிமுகவின் இரட்டைத் தலைமை என்பது டெல்லி தலைமை மற்றும் தமிழகத் தலைமை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் திருமாவளவன் கூறியதாவது:
''அரசு சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் விடுதலை சிறுத்தைகளின் நீண்ட நாள் கோரிக்கை. மத்திய அரசின் தலையீடு இருப்பதால்தான் அதிமுகவில் இன்று இரட்டைத் தலைமை பிரச்சினை வெடித்திருக்கிறது.
இரட்டைத் தலைமை என்பதை டெல்லி தலைமை மற்றும் தமிழகத் தலைமை என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மோடியும் அதிமுகவை தலைமை தாங்கி வழிநடத்துகிறார் என்பதுதான் அவர்கள் மறைமுகமாகச் சொல்லும் செய்தி.
அதிமுகவும் சுதந்திரமாக இயங்க வேண்டும். அதிமுக அரசும் சுதந்திரமாக இருக்கவேண்டும். மத்திய அரசின் தலையீடுகள் முறியடிக்கப்பட வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களுக்கு நான் விடுக்கிற வேண்டுகோள் ஆகும்''.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர். இந்நிலையில் அதிமுகவில் இரட்டைத் தலைமையால்தான் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததாகவும், வாக்கு வங்கி சரிந்ததாகவும் கட்சிக்குள்ளேயே குரல்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.