Published : 06 Jun 2019 12:00 AM
Last Updated : 06 Jun 2019 12:00 AM

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒன்றியத்தில் ஏ.சி. வகுப்பறைகளுடன் இயங்கும் அரசுப் பள்ளி: ஆசிரியர்களின் முயற்சியால் பெற்றோர் பெருமிதம்

திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடி எல்லையில் அமைந்துள்ளது மு.வேலாயுதம்பாளையம். திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில் வெள்ளகோவில் ஒன்றியம் முத்தூரை அடுத்துள்ள குக்கிராமம். விவசாயம் பொய்த்துப்போக, பலரும் பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர்களாகவும், சிலர் கட்டிடத் தொழிலாளர்களாகவும் பணிபுரியும் சூழல். கிராமத்தைவிட்டு பலர் வெளியே சென்றுவிட்ட நிலையில், சொற்ப எண்ணிக்கையில் வாழும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்கான நம்பிக்கை கீற்றாக ஒளிர்கிறது மு.வேலாயுதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இங்கு 42 பேர் தான் படிக்கிறார்கள்.

1966-ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி, 2007 வரை ஆரம்பப் பள்ளியாக செயல்பட்டது. 2008-ல் நடுநிலைப் பள்ளியானது. 2017-ல் பொன்விழா கொண்டாடப்பட்டது. நடப்பு ஆண்டில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், சொந்த பணத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறை, ஸ்மார்ட் அறை ஏற்படுத்தியுள்ளனர் ஆசிரியர்கள்.

கணினி கல்வி, கராத்தே பயிற்சி, யோகா கல்வி, விளையாட்டுக் குழு சீருடை, கல்விச் சுற்றுலா, குடிநீர், நவீன கழிப்பறை என அனைத்து வசதிகளும் உள்ளதோடு கொச்சி, குமரி போன்ற இடங்களுக்கு மாணவர்களை ஆசிரியர்கள் சுற்றுலாவும் அழைத்துச் செல்கின்றனர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.ஜான் வின்சென்ட் கூறும்போது, 'பள்ளியை மேம்படுத்த பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். அதன் ஒருபகுதியாக c5fca99cP2317083mrjpgright பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கோகிலவாணி, மனோகரன், சண்முகசுந்தரம், சத்யா, ரெஜினாபேகம் ஆகியோர் சேர்ந்து ரூபாய் ஒரு லட்சம் செலவு செய்து, குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறையை ஏற்பாடு செய்தோம். 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு, குளிர்சாதன வசதி உள்ள அறையை பயன்படுத்த உள்ளோம்.

இதேபோல் 6, 7, 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கணினி, ஸ்மார்ட் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். தற்போது, நெசவாளர் காலனியில் 80 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து குழந்தைகள் பலர் பள்ளியில் சேரத் தொடங்கிஉள்ளனர். அவர்களுக்கு பேருந்து வசதி இல்லை. தினமும் குழந்தைகளை அழைத்துவர ஆட்டோ ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காகமாதம் குறிப்பிட்ட தொகை ஒதுக்கிஉள்ளோம். மைதான வசதி இல்லாததால், அருகே உள்ள தனியார் இடத்தை விளையாடுவதற்காக கேட்டுள்ளோம்' என்றார்.

உள்ளூரைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் கூறும்போது, 'எங்களைப் போன்ற ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகள், இவ்வளவு வசதிகளுடன் படிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x