

ஜூன் 1-ம் தேதி முதல் பதிவு செய்யப்படுகின்ற பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்யப்படுகின்ற அனைத்து பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களும் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரின் மின் கையொப்பம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது:
''சென்னை மாநகராட்சியில் 1930-ம் வருடம் முதல் நடப்பு தேதி வரையில் நிகழும் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளும் கணினிமயமாக்கப்பட்டு, 2007 வருடம் முதல் இணையதளத்திலிருந்து பொதுமக்கள் இலவசமாக பதிவிறக்க செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படுகின்ற சான்றிதழ்களில் மாநகர சுகாதார அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளரின் மின் கையொப்பம் இருக்கும்.
தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சியில் ஜூன் 1-ம் தேதி முதல் பதிவு செய்யப்படுகின்ற / பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்யப்படுகின்ற அனைத்து பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களும் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரின் மின் கையொப்பம் செய்யப்பட்டு, www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்திலிருந்து பொதுமக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை ஏற்படுத்தப்படவுள்ளது''.
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.