Published : 11 Sep 2014 08:24 am

Updated : 11 Sep 2014 08:24 am

 

Published : 11 Sep 2014 08:24 AM
Last Updated : 11 Sep 2014 08:24 AM

மரங்களில் விளம்பரம் செய்தால் ரூ.1,000 அபராதம்: கர்நாடக அரசு அறிவிப்பு

1-000

சாலையோர மரங்களில் விளம்பரம் செய்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் அபராதமாக ரூ.1000 வசூலிக்கப்படும் என்றும் தவறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரில் மரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், துண்டு பிரசுரங்க‌ளை அகற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் னிவாச பிரசாத் புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர் களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.

மரங்களை வெட்டினால் தண்டனை

இதுகுறித்து, கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் ‘தி இந்து'விடம் கூறியதாவ‌து: மனிதர்களைப் போல மரம், செடி, கொடிகளுக்கும் உயிர் இருக்கிறது. மருத்துவமனையில் நமக்கு ஊசி போட்டாலே வலியால் துடிக்கிறோம். காலில் சின்ன முள் குத்தினால்கூட வலிக்கிறது. ஆனால் உயிரினங்கள் சுவாசிக்க ஆக்ஸிஜனை வழங்கும் மரங்களை வெட்டி சாய்க்கிறோம். கண்ணில் தென்படும் மரங்களில் எல்லாம் ஆணி அடித்து விளம்பரப் பதாகைகளை தொங்க விடுகிறோம்.

மழை பெய்வதற்குக் காரணமான மரங்களை நம்முடைய‌ உயிரைப் போல கருத வேண்டும். மரங்களைப் பாதுகாக்கத் தவறினால் எதிர்காலத் தில் பூமியில் உயிரினங்கள் முற்றிலு மாக அழியும் சூழல் ஏற்படும். ஆதலால் தங்களுடைய‌ வீட்டிலும், நிலத்திலும் உள்ள மரத்தை வெட்ட உரிய அனுமதி பெற வேண்டும். முன்பை விட கர்நாடக அரசு சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கும் மரங்களைப் பாதுகாப்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இதேபோல கர்நாடகாவில் சாலையோரத்தில், பூங்காவில், தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களில் விளம்பரம் செய்வது அதிகரித்து வருகிறது. மரங்களை காயப்படுத்தி இலவசமாக விளம் பரம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, ஒவ்வொரு மாநகராட்சியிலும் எத்தனை மரங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறித்த விவரங்கள் திரட்டப்படும். பின்னர் விளம்பரம் செய்த‌வர்களை பொதுசொத்துக்கு சேதம் விளைவிப்பவர்களாகக் கருதி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மரங்களில் விளம்பர பதாகைகள் அமைக்கப்படும் போது அடிக்கப்படும் பெரிய அளவிலான‌ ஆணிகள் மற்றும் கட்டப்படும் கம்பிகளால் அத‌ன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நாளடைவில் வலுவிழந்த மரம் காற்று வீசும் போதும், மழை பெய்யும்போதும் சாய்ந்து விழுகிறது. எனவே விளம்பரம் செய்வோர் மீது ம‌ரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதன்கிழமை மட்டும் பெங்களூரில் சாலையோர மரங்களில் பொருத்தப்பட்டிருந்த‌ 21,570 விளம்பரங் களை அகற்றி இருக்கிறோம். இந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்புக்கொண்டு, அவர்களிடம் ரூ.1000 அபராதம் வசூலித்திருக்கிறோம். கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

கேரளாவில் முன்னோடி திட்டம்

கடந்த 2013-ம் ஆண்டு கேரள மாநிலம் மூவள்ளப்புழாவில் ஒரு மேல்நிலைப் பள்ளி மாணவிகள், சாலையோர மரங்களில் விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அம்மாநில அரசுக்கும், தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து அப்போதைய கேரள உயர் நீதிமன்ற‌ தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், அந்த கடிதத்தை பொதுநல வழக்காக கருதி, 'கேரளாவில் மரங்களில் விளம்பரம் செய்வோர் மீது விளம்பர வரையறை சட்டத்தின் 6-ம் பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டார். அதனால் அங்கு மரங்களில் விளம்பரம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மரங்களில் விளம்பரம்ரூ.1000 அபராதம்கர்நாடக அரசு அறிவிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author