ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்துக்கு இணையானது நம் நாகரிகம்: அமைச்சர் பாண்டியராஜன்
ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்துக்கு இணையானது நம்முடைய நாகரிகம் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வுப் பிரிவு சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் சங்ககாலத் தமிழர்களின் நகர, நாகரிகம் குறித்த அகழாய்வு கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட அகழாய்வை மத்திய அரசு நடத்தியது. பின்னர் 4-ம் கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது.
தற்போது 5-ம் கட்ட அகழாய்வினையும் தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் தொல்லியலாளர்கள் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஐந்தாம் கட்ட அகழாய்வுக்கு ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 13-ம் தேதி 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். கடந்த 15 நாட்களாக நடந்த அகழாய்வில் பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பழங்கால, நீண்ட செங்கல் சுவர்கள் அகழாய்வின்போது கண்டறியப்பட்டன.
இதற்கிடையே சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ''கீழடியில் கடந்த 15 நாட்களாக 5-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதத்தில் முழுமையாக அகழாய்வுப் பணி முடிந்துவிடும். என்னென்ன பொருட்கள் கிடைத்துள்ளன என்பதை ஆவணப்படுத்திய பின்னர் தெரிவிப்போம்.
முதல் நான்கு கட்டங்களில் கிடைத்த 13,882 அரும்பொருட்களுடன் சேர்த்து, ஏராளமான ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்துக்கு இணையாக நமது நாகரிகமும் இருந்திருக்கிறது. சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்னாலேயே கீழடியில் நாகரிகம் இருந்துள்ளது'' என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.
