

அமமுகவிலிருந்து விலகும் தங்கதமிழ்ச் செல்வன் செந்தில் பாலாஜியை அடுத்து திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அனி என இரண்டாக பிரிந்தது. ஓபிஎஸ்சை ஓரங்கட்ட நினைத்த சசிகலா சிறைக்குச் செல்ல திடீரென டிடிவி தினகரனை கொண்டுவந்தார். பின்னர் இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைய ஓபிஎஸ் 11 எம்.எல்.ஏக்களுடன் தனியாக நின்றார்.
டெல்லி மேலிடத்துடன் நெருக்கமாக இருந்த ஓபிஎஸ்சை இபிஎஸ்சுடன் இணைத்து வைத்தது டெல்லி மேலிடம். தினகரன் ஓரங்கட்டப்பட்டார்.
அவருக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏக்கள் பிரிய பின்னர் தகுதியிழப்பு போன்ற காரணங்களால் ஒருவர் அதிமுகவிலேயே தங்கினார். 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வென்றதன்மூலம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரன் அணியிலான 18 எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். இடையில் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட உரசலில் செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவினார். பின்னர் கலைராஜன் திமுகவுக்கு தாவினார். இதனிடையே மக்களவை தேர்தல், 22 தொகுதி இடைத்தேர்தல் வந்தது.
அதிமுகவுக்கு எதிரான அலையில் திமுக பக்கம் சாதகமானது. ஆடிக்காற்றில் அம்மியே பறந்தபோது பலவித இக்கட்டான நிலையில் போட்டியிட்ட அமமுக எம்மாத்திரம். பலத்த தோல்வியை தழுவியது. ஆனாலும் நல்ல வாக்குகளை பெற்றது.
கட்சி தோல்வியை தழுவியதை ஏற்காதவர்கள் அதிமுகதான் எதிர்காலம் என தாவினர். பாப்புலர் முத்தையா அவரது ஆதரவாளர்கள் என வரிசைக்கட்டி அதிமுகவிற்கு பலரும் தாவி வருகின்றனர்.
இந்நிலையில் அமமுகவின் முக்கிய தூண்களில் ஒருவரான கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர்களில் ஒருவரான தங்கத்தமிழ்ச்செல்வன் தேர்தல் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் பேட்டிகொடுத்தார். கட்சித்தலைமையை விமர்சித்தார்.
திடீரென முதல்வர் எடப்பாடியை பாராட்டினார். இந்நிலையில் அவர் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேட்டி அளித்தனர்.
அதிமுகவுக்கு தங்கதமிழ்ச் செலவன் செல்வார் என்ற நிலையில் கட்சி நிர்வாகியிடன் செல்போனில் தங்கத்தமிழ்ச் செல்வன் டிடிவியை விமர்சித்து பேசியது பிரச்சினையை வெளிக்கொண்டுவந்தது. தங்கத்தமிழ்ச்செல்வனை கட்சியை விட்டு நீக்கியதாக டிடிவி தெரிவித்தார்.
இந்நிலையில் தான் ஒரு முடிவும் எடுக்கவில்லை அமைதியாக இருக்கப்போகிறேன் என தங்கதமிழ்செல்வன் தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென அவர் திமுகவில் இணைய முடிவெடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை காலை சட்டப்பேரவை கூட்டம் முடிந்தவுடன் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்சுக்கு கடும் சவாலாக இருக்கும் தங்கதமிழ்ச் செல்வன் திமுகவில் இணைவதன்மூலம் தென்மாவட்டத்தில் குறிப்பாக தேனி மாவட்டத்தில் திமுகவின் பலமும் கூட வாய்ப்புள்ளது. தனது ஆதரவாளர்களான 2 ஒன்றிய செயலாளர்களுடன் திமுகவில் இணைவதாகவும், இதற்காக தேனியிலிருந்து ஆதரவாளர்கள் சென்னைக்கு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிய தங்கதமிழ் செல்வனை தொடர்புக்கொள்ள முயன்றபோது அவர் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.