

சேலத்தை அடுத்த உடையாப்பட்டியில் மது வாங்குவதில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்கக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலத்தை அடுத்த உடையாப்பட்டி கக்கன் காலனியைச் சேர்ந்த சதீஷ் (22) மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர், ஊரில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் இருந்து வந்திருந்தார். கக்கன் காலனியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் இடத்துக்கு சதீஷ் நேற்று முன்தினம் இரவு சென்று மது வாங்கினார்.
மது பாட்டிலுக்கு கூடுதல் விலை கேட்டதால், அவர்களிடம் சதீஷ் தகராறு செய்துவிட்டு மது வாங்கிக் கொண்டு திரும்பினார். இதன் பின்னர் அவர் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர், சதீஷை சரமாரியாக தாக்கினர். இதனைத் தடுக்க வந்த சதீஷின் பெற்றோரையும் அவர்கள் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த சதீஷை அவரது உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சதீஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனிடையே, பலத்த காயமடைந்த சதீஷின் பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சதீஷ் உயிரிழந்ததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் கக்கன் காலனியைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை சேலம்-ஆத்தூர் நெடுஞ்சாலை யில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
பிரச்சினை குறித்து அவர்கள் கூறுகையில், ‘கக்கன் காலனியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் சிலர் ஈடுபடுவதால், அப்பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் தான் சதீஷ் உயிரிழந்தார். எனவே, சட்ட விரோத மதுக்கடைகளை அகற்ற வேண்டும். சதீஷ் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் அம்மாபேட்டை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால், சுமார் அரை மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, மறியலைக் கைவிட்டு திரும்பியவர்களில் சிலர், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப் படும் ஒரு வீட்டினை முற்றுகையிட்டு, அந்த வீட்டில் இருந்த மது பாட்டில்களை எடுத்து வந்து சாலையில் போட்டு உடைத்தனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
இதனிடையே, சதீஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் அம்மாபேட்டை போலீஸார் திலீப் என்பவர் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். கக்கன் காலனியில் பதற்றம் நிலவுவதால், அங்கு போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.