Last Updated : 23 Jun, 2019 12:00 AM

 

Published : 23 Jun 2019 12:00 AM
Last Updated : 23 Jun 2019 12:00 AM

தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ம்வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டப்படி 6 முதல் 8-ம் வகுப்பு வரை 3 ஆசிரியர்களும், 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்குப் பாடவாரியாக 5 ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி முந்தைய ஆண்டில் ஆக.1-ல் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்படும். இதனால் பெரும்பாலான பள்ளிகளில் 8 ஆசிரியர்களில் 5 பேர் மட்டுமேஇருக்க முடியும். அதேபோல் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், முதுநிலை ஆசிரியர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளோடு, 9, 10-ம் வகுப்புகளுக்கும் பாடம்எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 விதிமுறைகளால் மாநிலம் முழுவதும் 7 ஆயிரம்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உபரியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களைத் தேவையுள்ளபள்ளிகளுக்குப் பணி நிரவல்செய்துவிட்டு, 7 ஆயிரம் பணியிடங்களும் ரத்து செய்யப்படஉள்ளன. இதனால் உபரி ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜூ கூறியதாவது:

6 முதல் 10-ம் வகுப்பு வரை ஒரு நாளைக்கு 8 பாட வேளைகள் வீதம் வாரத்துக்கு (5 நாட்கள் மட்டும்) 8 ஆசிரியர்கள் 200 பாட வேளைகள் வரும். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 3 ஆசிரியர்களைக் குறைப்பதால் மீதமுள்ளஆசிரியர்களால் 200 பாடவேளைகளை எடுக்க முடியாது.

அவர்கள் வாரத்துக்கு 28 பாடவேளைகள் வீதம் மொத்தம் 140 பாட வேளைகள் மட்டுமே எடுக்க முடியும். மீதமுள்ள 60 பாட வேளைகளை எடுக்க ஆளில்லை. இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும். அதேபோல் முதுநிலை ஆசிரியர்களை 9, 10-ம்வகுப்பு எடுக்க அனுமதிப்பதால் உபரி பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 450 பேர் உபரி ஆசிரியர்களாக கணக்கிட்டுள்ளனர். விதிமுறைகளைத் தளர்த்தி அவர்களைப் பணி நிரவல் செய்வதைத் தடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விதிமுறையைத் தளர்த்துவது அரசின் முடிவு என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x