Published : 24 Jun 2019 03:47 PM
Last Updated : 24 Jun 2019 03:47 PM

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் லாபத்தைக் குறைத்துக் கொண்டு தண்ணீர் விநியோகிக்க வேண்டும்: அமைச்சர் வேலுமணி

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் லாபத்தைக் குறைத்துக் கொண்டு சேவை மனப்பான்மையுடன் தண்ணீர் விநியோகிக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் குடியிருப்புவாசிகள் பலரின் புகாரும் தனியார் தண்ணீர் லாரிகள் மீது குவிந்தன.

தனியார் தண்ணீர் லாரிகள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றன, அதிக பணம் கொடுப்பவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து, தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் ஆலோசனை நடத்துமாறு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி இன்று (திங்கள்கிழமை) தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "முதல்வரின் அறிவுறுத்தலின்படி இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தனியர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர், செயலர், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் 6000 தனியார் தண்ணீர் லாரிகள் உள்ளன. அவை 18,000 ட்ரிப் அடிக்கின்றன. 5000 ட்ராக்டர்கள் இருக்கின்றன.

இவற்றின் மூலம் தண்ணீர் விநியோகித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் புகார் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அரசு சார்பில் திருவள்ளூர், காஞ்சிர்புரம் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனையின் போது, இன்றைக்கு சென்னையில் தண்ணீர் பஞ்சம் நிலவும் சூழலிலும், நிலத்தடி நீர் கடுமையாக குறைந்த நிலையிலும் தினமும் சென்னைக்கு 525 எம்.எல்.டி தண்ணீர் கொடுத்து வருகிறோம்.

அதனால், தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் லாபத்தைக் குறைத்துக் கொண்டு சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் எண்ற கோரிக்கையை முன்வைத்தோம். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

இனி தனியார் லாரி உரிமையாளர்கள் யாரும் அதிக ரேட் வாங்க மாட்டார்கள். அப்படி வாங்கினால், மக்கள் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பிலும் புகார் தெரிவிக்கலாம். அதேபோல், மெட்ரோ வாட்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கலாம்.

சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்குவாரி, ஏரிகளில் உள்ள தண்ணீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்று நியமிக்கப்படுகிறது. இந்தக் குழு ஒவ்வொரு வீடாகவும் குடியிருப்பு வாரியாகவும் சென்று மழைநீர் சேகரிப்புத் தொட்டி குறித்து ஆய்வு செய்யும்.

தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு துளியையும் சேகரிக்க வேண்டும்" என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x