

பல ஆண்டுகள் பொது சேவையில் பணியாற்ற வாழ்த்துகிறேன் என்று ராகுல் காந்திக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து அவருக்குப் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், ஏ.கே.அந்தோணி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இன்று காலை ராகுல் இல்லத்துக்குச் சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”ராகுல் காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளையும், ஆரோக்கியமான உடல் நலத்தையும் பெற்று வாழ வேண்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ என்னுடைய சிறந்த நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். பல ஆண்டுகள் பொது சேவையில் பணியாற்ற வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.