‘அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள்’ - முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்

‘அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள்’ - முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்
Updated on
1 min read

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க வேண்டும் என, அக்கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரேயொரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 தொகுதிகளை கைப்பற்றியது. மக்களவைத் தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்த நிலையில், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

ஏற்கெனவே, அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதனால், ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே பிரச்சினை உள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதிமுக தொண்டர்களின் கட்சி எனவும், அக்கட்சியில் எல்லோருமே தலைவர்கள் தான் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்களவித் தேர்தலில் தோல்விக்குப் பிறகு, அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் இன்று (புதன்கிழமை) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஒற்றைத்தலைமை குறித்த சர்ச்சை, மக்களவைத் தேர்தலில் தோல்விக்கான காரணங்கள், உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டையில் உள்ள அதிக தலைமை அலுவலகம் முன்பு "அதிமுகவின் புதிய கழகப் பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள்", என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அழைப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள், பல்வேறு நிர்வாகிகள் சார்பில் ஒட்டப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in