Published : 27 Jun 2019 03:26 PM
Last Updated : 27 Jun 2019 03:26 PM

தமிழக காங்கிரஸ் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைப்பு

காங்கிரஸ் கட்சியில் குமரி ஆனந்தன் தலைமையில் 7 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோஷ்டி பூசலுக்கும், மோதலுக்கும் பெயர் போனது. காங்கிரஸ் கட்சியில் மட்டுமே தலைவர்கள் தலைமையில் தனித்தனி அணி இயங்குவது அப்பட்டமாக வெளியே தெரியும். சிதம்பரம் அணி, திருநாவுக்கரசர் அணி, ஈவிகேஎஸ் அணி, தங்கபாலு அணி பொதுவானவர்கள் என பல கோஷ்டிகள் உண்டு.

ஒவ்வொரு கோஷ்டிக்கும் மற்ற கோஷ்டிகளுக்கும் இடையே நடக்கும் மோதல் தெளிவாக தெரியும். இது தேர்தல் நடக்கும்போது தங்கள் அணியினருக்கான சீட்டுகளை கேட்டுப்பெறுவதில் வெளிப்படையாக தெரியும்.

ஒவ்வொரு கோஷ்டிக்கும் ஒரு அகில இந்திய தலைவருடன் அல்லது மேலிடத்துடன் செல்வாக்கு இருக்கும் இது தமிழக அளவிலும் எதிரொலிக்கும். தலைமைக்கு எதிராக பேசுவதும் சாதாரணமாக நடக்கும்.

சமீப முன்னேற்றம் கோஷ்டி மோதல், அடிதடி இல்லாமல் சாதாரணமாக தங்கள் பிரச்சினையை கவுரவமாக பேசிக்கொள்வது நடைமுறைக்கு வந்துள்ளது. காங்கிரஸ் தலைவராக ராகுல் வந்தபிறகு காங்கிரஸ் கட்சிக்குள் சில ஒழுங்கு நடவடிக்கைகளை அகில இந்திய அளவில் மாநில கட்சிகளுக்குள் கொண்டுவந்தார்.

யாரும் பெரிய தலைவராக இருக்க முடியாது, அனைவரும் கட்சிக்கு கட்டுப்பட்டவர்கள் என்று கொண்டு வந்தார். கர்நாடகா உள்ளிட்ட பல கமிட்டிகளை கலைத்துவிட்டார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் ஆங்காங்கே சிலபல பிரச்சினைகள் இருந்தாலும், திமுக காங்கிரஸ் கூட்டணி பற்றி வெளிப்படையாக திமுக தலைவர்கள் பேச அதுகுறித்து காங்கிரஸுக்குள்ளும் சிலர் பேச அது திமுக காங்கிரஸ் உறவையே பாதிக்க்கும் நிலைக்கு கொண்டுச் சென்றது.

இதையடுத்து சமீபத்தில் இந்தவிவகாரத்தில் கருத்து தெரிவித்த கராத்தே தியாகராஜன் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டார். அதையடுத்து காங்கிரஸ் கமிட்டிக்குள் 7 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன் இருப்பார். கன்வீனராக கே.ஆர்.ராமசாமி உறுப்பினர்களாக யசோதா, பலராமன், எஸ்.எம்.இதாயத்துல்லா,ஆர்.எம். பழனிசாமி, தம்பி விஜயகுமார் உள்ளிட்டோர் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x