குடிநீர் தட்டுப்பாடு; திமுக எம்எல்ஏ தலைமையில் பெண்கள் காலி குடங்களுடன் கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டுப் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது

குடிநீர் தட்டுப்பாடு; திமுக எம்எல்ஏ தலைமையில் பெண்கள் காலி குடங்களுடன் கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டுப் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது
Updated on
1 min read

கோயம்புத்தூரில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் தலைமையில் திமுகவினரும் பெண்களும் கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகரில் குடிநீர் சீரான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் குடிநீர் பிரச்சினைக்குக் காரணமான உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகர மாவட்டப் பொறுப்பாளரும் சிங்காநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், காலி குடங்களுடன் கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சிஆர்.இராமசந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

குடிநீர் விநியோகத்தைத் தனியார் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தது குறித்தும் போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை காவல்துறை கைது செய்தது. அவர்கள் அனைவரும் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in