

சென்னை கடற்கரையில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் திடீரென மோட்டார் சைக்கிள் சாகசம் செய்தும், அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டியும் பொதுமக்களை அச்சுறுத்தினர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நடவடிக்கை எடுத்த போக்குவரத்து ஆய்வாளரிடம் சில இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டனர். அவர்களின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் அதிவேக திறன்கொண்ட மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர் அல்லது இவர்களே விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் இவர்கள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டுநரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
சென்னையில் மூன்றுபேர் வாகனங்களில் செல்வதும், அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தயம், குறுக்குமறுக்கு ட்ரைவிங் குறித்து போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்காததும் இளைஞர்கள் தன்னிச்சையாக இவ்வாறு செயல்பட காரணமாக அமைகிறது. சென்னை கடற்கரையில் நேற்றிரவு 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென குவிந்தனர்.
கடற்கரை சாலை முழுதும் ஆக்கிரமித்த அவர்கள் சாலைகளில் வீலிங் செய்தும், வேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டியும் சாகசத்தில் ஈடுபட்டனர். சிலர் அதிவேகமாக சாலையில் சென்றபடி மோட்டார் சைக்கிள் ஸ்டாண்டை தரையில் தேய்த்தப்படி நெருப்புப் பொறி ஏற்படுத்தி சாகசம் செய்தனர்.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயந்தபடி வாகனங்களை இயக்கும் நிலை ஏற்பட்டது. 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இவ்வாறு பல மணி நேரம் கடற்கரைச் சாலையில் வாகனங்களை இயக்கியும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. சிலர் போலீஸுக்கு போன் செய்து கூறியும் போலீஸார் வரவில்லை என்று தெரிவித்தனர். காலை 3 மணிவரை சாகசம் செய்த இளைஞர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.
ஆண்டுதோறும் குறிப்பிட்ட சமூகத்தின் முக்கியமான நாளில் இவ்வாறு இளைஞர்கள் கூடி ஓ.எம்.ஆர், கடற்கரை சாலை, இ.சி.ஆர் சாலையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் உயிரிழப்பு, காயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் சாகசம் என்கிற பெயரில் அதிவேகமாக ஓட்டியபோது அயோத்திகுப்பம் மீனவர்கள் மீது மோத சிலர் காயமடைந்தனர்.
இதனால் ஏற்பட்ட மோதலில் மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டது. இதை உளவுத்துறைபோலீஸார் எச்சரிக்கையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுபோன்ற விஷயங்கள் கடற்கரையில் நேற்றிரவும் நடந்துள்ளது. போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனிடையே நேற்றிரவு இதுபோன்ற அதிவேக பந்தயத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் இளைஞர்கள் சிலரை பெசன்ட் ரோடு காமராஜர் சாலை சந்திப்பில் (குடிசை மாற்று வாரியம்) அருகில் மயிலாப்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுவாமிநாதன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது மடக்கியுள்ளார்.
இதுகுறித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது மணலி பெரிய தோப்புப் பகுதியைச் சேர்ந்த சூர்யா (20) என்ற இளைஞர் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்து தன்னை எதற்காக சோதனையிட வேண்டும் என்று கேட்டு பிரச்சினை செய்துள்ளார். அவரது இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு மெரினா காவல் நிலைத்தில் வைக்கப்பட்டது. இவருடன் மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட மேலும் நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.