Published : 22 Sep 2014 11:56 AM
Last Updated : 22 Sep 2014 11:56 AM

தீபாவளிக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி; விற்பனை இலக்கு ரூ.182 கோடி: கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் தகவல்

கோ-ஆப்டெக்ஸில் இந்த ஆண்டு தீபாவளி ஜவுளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ.182 கோடி என்றார் அதன் மேலாண் இயக்குநர் டி.என்.வெங்கடேஷ்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

முதல் விற்பனையை தொடங்கி வைத்து கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் டி.என். வெங்கடேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கவும் அவர்கள் உற்பத்தி செய்யும் துணி ரகங்களை விற்பனை செய்யவும் நாடு முழுவதும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 197 விற்பனை நிலையங்களை அமைத்துள்ளது.

இந்த விற்பனை நிலையங்கள் மூலம் கோ-ஆப்டெக்ஸில் இந்த ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ.182 கோடியாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ.160 கோடி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை மட்டும் ரூ.12 கோடிக்கு நடைபெற்றுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு ரூ.18 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அக்டோபர் 31 வரை மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும்.

மைசூர், பெங்களூர் போன்ற இடங்களில் மன்னர்கள் காலத்தில் மகாராணிகள் உடுத்திய சேலை களின் டிசைன்களை ஆயிரம் டிசைனர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அதேபோன்ற சேலைகளை புதிய வடிவமைப்பில் தயாரித்துள்ளனர். இங்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10,000 வரை விலைகளில் சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அனைவரும் அணியும் வகையில் மிகக் குறைந்த விலையான ரூ.2 ஆயிரம் மதிப்பில் மென்பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் 6 விற்பனை நிலையங்கள் நவீன முறையில் புதுப்பிக் கப்பட்டுள்ளன. ஆடவர் விற்பனை பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி பெண்கள் விரும்பும் வகையில் புதிய ரக சுடிதார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் துணி ரகங்களை வாங்கி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு வெங்கடேஷ் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன் முன்னிலை வகித்தார். கும்பகோணம் சார் ஆட்சியர் மந்திரிகோவிந்தராவ், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சண்முகசுந்தரம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநர் தே.மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x