தமிழகத்தின் 15-வது மாநகராட்சியானது ஆவடி: அரசாணை வெளியீடு

தமிழகத்தின் 15-வது மாநகராட்சியானது ஆவடி: அரசாணை வெளியீடு
Updated on
1 min read

தமிழகத்தில் ஏற்கெனவே 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில் ஆவடி புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு அருகில் நகராட்சியாக இருந்து வந்தது ஆவடி. மொத்தம் 148 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஆவடி, புதிய மாநகராட்சியாக அமைய உள்ளதாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ளார்.

ஆவடி மாநகராட்சியாக உயர்த்தப்பட்டதால், அதற்காக மேயர், கவுன்சில் உறுப்பினர்கள், ஸ்டாண்டிங் கமிட்டி, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் வருவார்கள். ஆவடி மாநகராட்சியின் மக்கள் தொகை சுமார் 6 லட்சம். எத்தனை வார்டுகள் என்பது குறித்து இனிமேல் முடிவெடுக்கப்படும்.

ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவடி மாநகராட்சியாக மாற்றப்பட்டதன் சட்டம் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமல்படுத்தப்படும்.

தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில் என 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில் 15-வது மாநகராட்சியாக ஆவடி இணைகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in