

நாகர்கோவில் அருகே சொத்துக்காக தந்தையை எரித்துக் கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அரிதினும் அரிதான இவ்வழக்கில் நீதிபதி கொடுத்த தண்டனை இவ்வழக்கை தனித்தன்மை மிகுந்த வழக்காகவும் மாற்றியிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையன் (72). அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் பணிமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பப் பிரச்சனையின் காரணமாக, சொந்த வீட்டில் வசிக்காமல், ஈத்தாமொழி அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் பொன்னையனின் பாரம்பரிய குடும்ப வீட்டை தனக்கு எழுதிக்கேட்டு அவரது மகன் விஜயகுமார் (39) தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி, ஈத்தாமொழியில் தனது வீட்டில் தனிமையில் இருந்த பொன்னையனிடம், குடும்ப சொத்துகளை தனக்கு எழுதித் தர வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் மகன் விஜயகுமார் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வீட்டிலிருந்த பொருள்களுக்குத் தீ வைத்ததோடு, அதில் தனக்கு சொத்தைத் தராத ஆத்திரத்தில் தன் தந்தையையும் தூக்கி வீசினார் விஜயகுமார். இதில் பலத்த தீக்காயமடைந்த பொன்னையன், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஈத்தாமொழி போலீஸார், விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக நாகர்கோவில் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ.அப்துல்காதர் தீர்ப்பளித்தார்.
''விசாரணையில் சொத்துக்காக தந்தையை கொலை செய்திருப்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது. எனவே, ஐ.பி.சி., 448 ன் கீழ் (அத்துமீறி நுழைதல்) குற்றவாளிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், பிரிவு ஐ.பி.சி., 435 ன் கீழ் (தவறான செயலுக்கு தீயை பயன்படுத்தியது) 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், ஐ.பி.சி., 302 (கொலை) பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாகவும், தனித்தனியாகவும் குற்றவாளி அனுபவிக்க வேண்டும்.
மேலும் இவ்வழக்கில் குற்றவாளி மொத்த தண்டனை காலத்தில் 3 மாத காலம் தனிமை சிறையில் இருக்க வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதாவது, ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி முதல் முதல் 20-ம் தேதிக்குள் ஏதேனும் 5 நாட்களுக்கு அவர் செய்த குற்றத்தை எண்ணிப் பார்ப்பதற்காக, சிறை அதிகாரிகள் தனிமை சிறையில் அடைக்கவேண்டும். இவற்றை அடுத்த மாதத்திலிருந்து 18 மாதங்களில் அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கொலையாளி விஜயகுமார், சொத்துக்காகத் தன்னை பெற்று வளர்த்த தந்தையையே கொலை செய்துள்ளார் என்பதால், பிரிவு 25 இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி, விஜயகுமார் கொலை செய்யப்பட்ட நபரான பொன்னையனின் வாரிசாக மாட்டார். அதோடு மட்டுமில்லாமல் இறந்து போனவரின் சொத்துகளை தன் வசப்படுத்தி இருக்கும் விஜயகுமாரிடம் இருந்து அவற்றைப் பெற்று, உயிரிழந்த பொன்னையனின் மற்ற வாரிசுகள் வசமும் ஒப்படைக்க வேண்டும் என, நீதிபதி ஏ.அப்துல்காதர் தனது தீர்ப்பில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஞானசேகர் ஆஜரானார். இவ்வழக்கில் தண்டனை பெற்றுள்ள விஜயகுமார் டாஸ்மாக் பணியாளராக இருந்து வந்தார்.
சொத்துக்காகப் பெற்றோரைக் கொன்றால் கொடூரமான தண்டனை கிடைப்பதோடு, வாரிசு உரிமையே பறிக்கப்படும் என்பதை உணர்த்துவதால் இந்தத் தீர்ப்பும், வழக்கும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.