மூன்றாம் பாலினத்தவருக்கான முதல் பன்னோக்கு மையம்: சென்னை அரசு பொது மருத்துவமனையில் திறப்பு

மூன்றாம் பாலினத்தவருக்கான முதல் பன்னோக்கு மையம்: சென்னை அரசு பொது மருத்துவமனையில் திறப்பு
Updated on
2 min read

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தினை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்து பார்வையிட்டு மூன்றாம் பாலின சமூகத்திற்கான ஆதரவு உறுதிமொழியை மருத்துவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:

“தமிழக அரசு மூன்றாம் பாலினத்தவர் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவர் சிகிச்சைக்கான சிறப்புப் பிரிவு தலா ரூபாய் 15 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இன்று  சென்னை அரசு பொது மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்த சிறப்புப் பிரிவு மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தில் பாலின மாற்று பன்னோக்கு உயர் சிகிச்சைகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாம் பாலினத்தவர்கள் மற்ற நோயாளிகளைப் போலவே தங்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக எல்லா நாட்களிலும் எல்லா நேரத்திலும் அரசு மருத்துவமனைகளில் எந்தவித தயக்கமுமின்றி வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தேவையான பாலின மாற்று அறுவை சிகிச்சை உட்பட அனைத்து பாலின மாற்று சிகிச்சைகளும் வழங்குவதே இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையத்தின் நோக்கம் ஆகும்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிகிச்சை முறைகள் விரைவாகவும், அவர்கள் எவ்வித தயக்கமுமின்றி பெற்றிடவும் இந்த மையம் ஏதுவாக இருக்கும். இம்மையத்தில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் (Plastic Surgeon), நாளமில்லா சுரப்பியல் மருத்துவர் ((Endocrinologis), பால்வினை நோய் இயல் மருத்துவர் (Venerologis), மனநல மருத்துவர் (Psychiatris) உட்பட அனைத்து சிறப்பு மருத்துவக் குழுக்களும் செயல்படும்.

இந்த சிறப்புப் பிரிவு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் அறை எண்.108-ல் வழங்கப்படும். சென்னை அரசு பொது மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு முதல் இதுவரை 17 நபர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த சேவை தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் கட்டணம் ஏதுமின்றி தரமான முறையில் தொடரப்படும்.

எனவே, மூன்றாம் பாலினத்தவர்கள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ரூபாய் 1.34 கோடி மதிப்பில் பாலின மாற்று தொடர் சிகிச்சை அளிக்க தேவையான கருவிகள் கூடுதலாக வழங்கப்பட்டு இம்மையம் விரைவில் மேம்படுத்தப்படும்”.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர்  தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in