Published : 07 Jun 2019 03:17 PM
Last Updated : 07 Jun 2019 03:17 PM

போக்குவரத்து விதிமீறல்; இந்திய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்களுடன் கூடிய நவீன புதிய இ.சலான் கருவி: நவீன வசதிகள் என்னென்ன?-ஒரு அறிமுகம்

சென்னை போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய இ-சலான் கருவிகள் (போக்குவரத்து விதிமீறல்களுக்கான மின்னனு ரசீது வழங்கும் கருவிகள் - New E-Challan Machines) மற்றும் “GCTP Citizen Services” கைபேசி செயலி ஆகியவற்றை சென்னை காவல் ஆணையார் ஏ.கே.விசுவநாதன் தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து போலீஸார் வாகனங்களை பிடிக்கும்போது ஏற்படும் சச்சரவுகள், போலீஸார் மீது கூறப்படும் அபராதம் குறித்த குற்றச்சாட்டு, நான் அங்கு இல்லை என வாகன ஓட்டிகள் நழுவுவது, அபராதம் கட்டிக்கொள்கிறேன் என ரசீதை வாங்கிக்கொண்டு கட்டாமல் விடுவது, வாகனத்தை மாற்றிக்காட்ட முயல்வது, போலி நம்பர் பிளேட், போலி ஆவணங்கள் போன்றவற்றை வைத்து இனி போலீஸாரை ஏமாற்ற முடியாது.

வெளியூர் வாகனங்கள், வெளிமாநில வாகனங்கள் குற்றச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் மூலம் சிக்கவைக்கும் மென்பொருள் போன்ற நவீன வசதிகளுடனான இ.சலான் கருவியை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த கருவியில் உள்ள ஜிபிஎஸ் கருவியினால் போக்குவரத்து காவலர் உயர் அதிகாரிகளை ஏமாற்ற முடியாது, எங்கிருக்கிறார்கள் என்பதை அது காட்டிகொடுக்கும்.

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க மின்னனு ரசீது வழங்கும் திட்டம் (Electronic Challan System for Spot Fining Traffic Violators) 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28- ம் தேதி துவக்கப்பட்டது.

இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வாகன ஓட்டிகள் அபராத தொகையை டிஜிட்டல் கட்டண முறைகளில் செலுத்த ஏதுவாகவும், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பெறும் முறையில் வெளிப்படை தன்மையை உறுதிசெய்யவும், சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறை கடந்த 2018-ம் ஆண்டு மே 10  முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது .

இதன் அடுத்தகட்டமாக, நிகழ்காலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய 352 புதிய இ-சலான் கருவிகளை (போக்குவரத்து விதிமீறல்களுக்கான மின்னனு ரசீது வழங்கும் கருவிகள்) இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த இ-சலான், வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் உரிமம் குறித்த தகவல்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுடன் நிகழ்நேரத்தில் இணைக்கப்படாமல் இருந்தது, மேலும் பணஅட்டைகள் மூலம் அபராதத்தை பெற தனியான கருவிகள் வழங்கப்பட்டிருந்தன.

தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய இ-சலான் கருவிகளில் உள்ள மென்பொருளானது, (National Informatics Centre (NIC), New Delhi-யால் பிரத்தியேகமாக சென்னை போக்குவரத்து காவல் துறையின் பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது முற்றிலுமாக இணையவழியாக செயல்படகூடியது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுடன், வாகன பதிவிற்கான வாகன(Vahan) இணையதளத்துடனும், ஓட்டுனர் உரிமத்திற்கான சாரதி (Sarathy) இணையதளத்துடனும் நிகழ்நேரத்தில் இணைக்கப்பட்டுள்ளது (Integrated with all RTOs using the Vahan and Sarathi ecosystems).

இந்த இணைய சேவையால் போக்குவரத்த விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் வாகன எண் மற்றும் ஓட்டுநர் உரிம எண் ஆகியவற்றை புதிய இ-சலான் கருவிகளில் பதிவிட்ட அடுத்த நொடி வாகன ஓட்டிகளின் அனைத்து தகவல்களும் புகைப்படத்துடன் காண்பிக்கும்.

இதனால் வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின் உண்மை தன்மையை உறுதி செய்யப்படும்.

மேலும் இந்த புதிய மென்பொருள் மூலம் பிற மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் மீதும் வழக்குகள் பதியலாம். அந்த வாகனம் மற்ற மாநிலத்தில் ஏதாவது வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தாலும் கருவி காட்டிக்கொடுத்துவிடும்.

இந்த மென்பொருள் மூலம் வழக்குகள் பதியப்பட்டு அந்த வழக்குகள் அபராதம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தால், இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் Fitness Certificate (FC), பெயர் மாற்றம் (Name Transfer) போன்ற எந்த சேவைகளையும் பெற இயலாது.

மேலும் போக்குவரத்து அதிகாரிகள் வழக்குகள் பதியும் போதே விதிமீறலில் ஈடுபட்டவர்களின் ஓட்டுனர் உரிமங்களை தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யும் வசதி இந்த புதிய முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் மின்னணு வடிவில் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்ய அனுப்பி வைக்கலாம்.

தற்பொழுது வழங்கப்பட்டுள்ள இந்த நவீன இ-சலான் கருவியில் பண அட்டைகள் மூலம் அபராதத்தை வசூலிக்கும் வசதி இந்த கருவியிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து விதிமீறலுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை மற்றும் பண அட்டை கொண்டு செலுத்தப்படும் தொகைக்கும் எந்தவித முரண்பாடுகளும் இருக்காது.

 பண அட்டை இல்லாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராத தொகையை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறைகள் அதாவது i) இ-சேவை மையம் ii) அஞ்சல் நிலையம் iii) பேடிஎம் (Paytm) போன்ற ஏதாவது ஓரு முறைப்படி அபராதத் தொகையை செலுத்தலாம்.

மேலும் தமிழ்நாடு காவல்துறையின் இணையதளத்தில் (www.tnpolice.gov.in) அபராதத் தொகையை இணைய வழி பணப்பரிமாற்ற முறைகளில் (Online Banking) செலுத்தலாம். மேலும் இந்த புதிய இயந்திரத்தில் உள்ள கேமரா வழியாக விதிமீறலில் ஈடுபடும் வாகனம், வாகன ஓட்டி ஆகியோரின் புகைப்படங்கள், ஆவணங்களின் புகைப்படங்கள் போன்றவற்றை தேவைப்பட்டால் பதிவு செய்து வழக்கு ரசீதுடன் இணைத்துக் கொள்ளலாம்.

இதனால் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் முரண்பாடுகளை தவிற்க்களாம்.இந்த நவீன மின்னணு கருவிகளைப் பயன்படுத்தி அதிகாரிகள் எங்கு வழக்குப்பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உயரதிகாரிகள் நிகழ்நேரத்தில் வரைபடத்தில் கண்காணிக்கலாம்.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிக அளவிலான வழக்குகள் பதிவு செய்து போக்குவரத்துச் விதிமீறல்களை தடுக்கவும், விபத்துக்களை குறைக்கவும் இந்த புதிய முறை பயனுள்ளதாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x