Published : 01 Jun 2019 04:06 PM
Last Updated : 01 Jun 2019 04:06 PM

அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்கள்; பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு இல்லாததால் 1242 இடங்கள் பறிபோகும் நிலை: மருத்துவர் சங்கம்

அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 %  இட ஒதுக்கீடு  இல்லாததால் 1242 இடங்களை முற்பட்டோர் ஆக்கிரமிக்கும் நிலை உள்ளது. அதை சரிசெய்யவேண்டும் என மத்திய அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் ஏறத்தாழ 4600 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள் அகில இந்தியத் தொகுப்பில் உள்ளன.

பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, இந்த இடங்களில் எஸ்.சி, எஸ்.டி  பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை.

பல முறை இது குறித்த கோரிக்கைகளை முன்வைத்த பிறகும் ,மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய 1242 மருத்துவ இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கவில்லை.

இந்த 1242 மருத்துவ இடங்களிலும் அதிக அளவில் முன்னேறிய வகுப்பினரே சேர்ந்து வருகின்றனர். இது சமூக நீதிக்கு எதிரானது.

இந்நிலையில் முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடை நடப்பு கல்வியாண்டிலேயே  வழங்கிட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு ,நீட் நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

 இது மேலும் இதர பிற்படுத்தப் பட்டப் பிரிவினரை மிகக் கடுமையாக பாதிக்கும். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்காமல், முன்னேறிய வகுப்பில் உள்ள ,பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடை வழங்குவது, இதர பிற்படுத்தப் பட்டோருக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகும்.  

எனவே, இதர பிற்படுத்தப் பட்டோருக்கு அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென , சமூக  சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது”

இவ்வாறு அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x