

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் சென்னையில் வரும் 23-ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பதவிகளில் 6,491 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் நேற்று தொடங்கியது. ஜூலை 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப்-4 தேர்வைப் பொறுத்தவரை, நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலே போதுமானது. இந்நிலையில் இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சியை பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை வழங்க உள்ளது.
இதுகுறித்து பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை இயக்குநரும், தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளருமான எஸ்.எஸ்.ஜவஹர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசு தேர்வாணைக் குழுமம் அறிவித்துள்ள குரூப்-4, 2019 ஆம் ஆண்டுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதால் பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் போட்டித்தேர்வுக்கான சிறப்புப் பள்ளியில் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதற்கான இலவச அறிமுக வகுப்பு வரும் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை வேப்பேரி, ஈ.வி.கே. சம்பத் சாலையில் அமைந்துள்ள பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னின் வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் வரும் 23-ம் தேதி காலை 10.30 மணிக்குள்ளாக நேரில் பதிவு செய்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். தொலைபேசி எண்கள் 044-26430029 மற்றும் 8668038347 மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளார்.