Published : 18 Sep 2014 11:10 AM
Last Updated : 18 Sep 2014 11:10 AM

வறுமையால் விபரீத முடிவு: மனைவி, 2 மகள்களுடன் பெட்ரோல் ஊற்றி கார் ஒட்டுநர் தீக்குளித்து உயிரிழப்பு

நீலாங்கரையில் கணவன், மனைவி இருவரும் தங்கள் மீதும் 2 மகள்கள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு இறந்தனர்.சென்னை நீலாங்கரை செங்கேணி அம்மன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்தவர் வெங்கடேசன் (42). பாலவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக வேலை செய்தார். இவரது மனைவி மலர் (37). இவர்களது மகள்கள் ஹரிணி (7), பரணி (3). வீட்டருகே உள்ள தனியார் பள்ளியில் ஹரிணி 3-ம் வகுப்பு படித்துவந்தார்.

வெங்கடேசனை அவர் பணியாற் றிய தனியார் நிறுவனத்தினர் 4 மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கிவிட்டனர். அதைத் தொடர்ந்து அவர் சரியான வேலை கிடைக்காமலும், குடும்பம் நடத்து வதற்கு பணம் கிடைக்காமலும் வருந்தியதாக கூறப்படுகிறது. மகளின் பள்ளிக் கட்டணத்தையும் அவரால் செலுத்தமுடியவில்லை. இதையடுத்து வெங்கடேசன் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினார். அதையும் அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் அவர் கடும் மன அழுத்தத்துக்கு ஆளானார்.

இதனால் குடும்பத்துடன் தற் கொலை செய்து கொள்ளலாம் என்ற தவறான முடிவை வெங்கடேசன் எடுத்ததாக கூறப்படுகிறது. இதை மனைவியிடம் கூற அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலையில் வெங்கடேசன், அவரது மனைவி இருவரும் தங்கள் உடம்பில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த மகள்கள் ஹரிணி, பரணி ஆகியோர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டனர்.

4 பேரும் இறந்தனர்

வீட்டுக்குள் இருந்து கரும்புகை வெளியேறுவதை அருகே இருந்த வர்களும், தரை தளத்தில் குடி யிருக்கும் வீட்டின் உரிமையாளரும் பார்த்து வெங்கடேசன் வீட்டுக் கதவை தட்டினர். ஆனால் யாரும் திறக்கவில்லை. பின்னர் கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடேசன், மலர், ஹரிணி ஆகியோர் உடல் கருகிய நிலை யில் இறந்து கிடந்தனர். இளைய மகள் பரணி மட்டும் காலில் இருந்து இடுப்பு வரை எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

நீலாங்கரை காவல் உதவி ஆய்வாளர் சங்கர், ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பரணியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறிது நேரத்தில் பரணியும் இறந்தார்.

காதல் திருமணம்

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், "வெங்கடேசன், மலரின் சொந்த ஊர் நெய்வேலி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணம் என்பதால் இருவரது பெற்றோரும், உறவினர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. இவர்களின் கஷ்ட காலத்தில் கூட அவர்கள் உதவி செய்யவில்லை. வெங்கடே சன் வேலைக்கு செல்லாததால் குடும்பமே வறுமையில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் கடந்த ஒரு மாதமாக பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூட சரியாக பேசவில்லை. அவ்வப்போது ஓட்டலில் வாங்கி சாப்பிட்டுள்ளனர். வெங்கடேசன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது குறித்து நெய்வேலியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்" என்றனர்.

வெங்கடேசன் குடும்பமே அழிந்து விட்ட நிலையில் அவர் களின் சாவுக்கு உண்மையான கார ணம் இதுதானா என்பது மர்ம மாகவே உள்ளது. கடன் கொடுத் தவர்களின் மிரட்டல் அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கஷ்டங்களை சமாளித்து வாழ வேண்டும்

மனநல மருத்துவர் தேவராஜன் கூறியதாவது, "தம்மைப்பற்றி அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்தபடியே பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இது தவறான வாழ்க்கை முறை. இப்படியே வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் பலருக்கு தற்கொலை சிந்தனை ஏற்படுகிறது.

கஷ்டங்கள் இல்லாத மனிதனே கிடையாது. இவர்கள் பணத்தை காரணம் காட்டி தற்கொலை செய்துள்ளனர். ஆனால், பெரும் பணக்காரரான அம்பானிக்கு கூட அவரது தகுதிக்கு ஏற்றவாறு பிரச்சினைகளும், கஷ்டங்களும் இருக்கும். அவற்றை சமாளித்து வாழ்பவனே மனிதன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x