Published : 21 Jun 2019 10:32 am

Updated : 21 Jun 2019 10:32 am

 

Published : 21 Jun 2019 10:32 AM
Last Updated : 21 Jun 2019 10:32 AM

சிறை கைதிகளுக்கு யோகா- ஏராளமானோருக்கு பயிற்சி அளித்த ஈஷா!

யோகா உடல் ஆரோக்கியத்துக்கும், மன அமைதிக்கும், உள் நன்மைக்கும் தேவையான அடிப்படைத் தொழில்நுட்பம். இது என் கைகளிலோ, ஏதோ ஒரு தனிப்பட்ட இயக்கத்தின் கைகளிலோ இருக்கக்கூடாது. தனி மனிதனின் நன்மைக்காக பயன்படும் இந்தக் கருவி, ஒவ்வொரு மனிதரின் கைகளிலும் இருக்க வேண்டும்” என்கிறார் `சத்குரு’ என்றழைக்கப்படும் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ்.

வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், லட்சக் கணக்கான தன்னார்வலர்களின் உதவியால் கடந்த 30 ஆண்டுகளில் பல கோடி பேருக்கு யோகா கற்றுக்கொடுத்து சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர் ஈஷா யோகா மையத்தினர். அந்த அமைப்பினரிடம் பேசினோம்.


“தனது 25-வது வயதில் யோகா கற்றுக் கொடுக்கத் தொடங்கியபோது, அவரது வகுப்பில் 7 பேர் மட்டுமே பங்கேற்றனர். தாங்கள் கற்றதையும், பெற்றதையும், மற்றவர்களுக்கும் விளக்கினர். அடுத்த யோகா வகுப்புக்கான ஆட்களை திரட்டி வந்ததுடன், வகுப்பின் தன்னார்வலர்களாகவும் மாறினர். இப்படி, கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்த எண்ணிக்கை லட்சங்களைத் தொட்டது. பின்னர், பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள், ஊடகங்கள் உதவியால் இந்த எண்ணிக்கை பல கோடியாக அதிகரித்துள்ளது. இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம், தொடங்கியது முதல் இன்று வரை எந்த யோகா வகுப்பும் பாதியில் ரத்து செய்யப்பட்டது இல்லை.

முந்தைய காலங்களில் ஆன்மிக குருவால், தனது நெருங்கிய சீடர்களுக்கும், குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் மட்டுமே சக்திவாய்ந்த தியானப் பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டன. இதை மாற்றி, ஜாதி, மதம், இனம், பாலினம், ஏழை, பணக்காரன் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, யோகாவை பொதுவுடைமையாக்கினார் ஜக்கிவாசுதேவ்.

உலக அளவில் பிரபலமடைந்துள்ள ஈஷா யோகா மையம், பள்ளி, கல்லூரி மாணவர்களில் தொடங்கி, சிறைக் கைதிகள், பாதுகாப்புப் படை வீரர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கிராமப்புற மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் யோகா கற்றுக்கொடுத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21-ம் தேதியை உலக யோகா தினமாக அறிவித்த பிறகு, ஈஷா யோகா மையம் தனது பணியை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

ஆயுஷ் அங்கீகாரம்!

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், ஈஷா யோகா மையத்தை அங்கீகரிக்கப்பட்ட யோகா நிறுவனமாக அறிவித்துள்ளது. மேலும், அமைச்சகத்தின் வழிகாட்டுக் குழுவிலும் ஈஷாவை இணைத்துள்ளது. இதையடுத்து, உலக யோகா தினத்துக்காக பல்வேறு செயல்திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் ஈஷா மேற்கொண்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக, எல்லைப் பாதுகாப்பு படையினருடன் ஈஷா அறக்கட்டளை ஒப்பந்தம் செய்து, 2.5 லட்சம் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு, அறிவியல் முறைப்படி யோகா கற்றுத்தந்து வருகிறது. மேலும், துணை ராணுவப் படையினருக்கு ஹடயோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவச யோகா வகுப்புகளை ஈஷா நடத்தி வருகிறது. இதுவரை, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்துள்ளது.

இதேபோல ‘உப யோகா’ பயிற்சியை இலவசமாக கற்றுத் தருகிறது. இதை எளிதில் கற்று, பிறருக்கும் சொல்லிக்கொடுக்க முடியும். தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள், உப யோகா பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர். உலக யோகா தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் இலவச யோகா வகுப்புகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். உலகில் 6 கண்டங்களில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக யோகா தின நிகழ்ச்சிகளை ஈஷா நடத்துகிறது. கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திலும் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், 14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம்.

முதலாம் ஆண்டு உலக யோகா தினத்தின்போது, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ், மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது 25 ஆயிரம் பேருக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும், 35,600 ஆசிரியர்கள் மூலம் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.

இரண்டாமாண்டு யோகா தினத்தில், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஜக்கி வாசுதேவ் உரை நிகழ்த்தியதுடன், யோகா வகுப்பும் நடத்தினார்.

மூன்றாமாண்டில் கின்னஸ் சாதனை படைத்த, 112 அடி ஆதியோகி முன்பு நடந்த நிகழ்ச்சியில், அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா பங்கேற்றனர். 4-ம் ஆண்டு யோகா தினத்தின்போது, உலகின் மிக உயரமான சியாச்சின் மலைச் சிகரத்தில், ராணுவ வீரர்களுக்கு ‘அங்கமர்த்தனா’ என்ற யோகா பயிற்சியை ஜக்கி வாசுதேவ் கற்றுக்கொடுத்தார். கடும் குளிரில் ராணுவ வீரர்கள் சிறப்பு ஆடைகளை அணிந்திருந்த நிலையில், ஜக்கி வாசுதேவ் எவ்வித பாதுகாப்பு உடைமைகளுமின்றி யோகா கற்றுக்கொடுத்தது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு யோகா தினத்தையொட்டி மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றி, யோகா பயிற்சி வகுப்பு நடத்துகிறார் ஜக்கி வாசுதேவ்” என்றனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author