

தன்னை ஒருவர் திருமணம் செய்வதாக ஏமாற்றி, தனது செல்போன் எண்ணை நண்பர்களுக்குப் பகிர்ந்ததால் தனக்கு ஏராளமான ஆபாச அழைப்புகள் வருவதாக சின்னத்திரை நடிகை நிலானி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
கடந்த ஆண்டு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கமிஷனர் உடையில் போலீஸை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியவர் சின்னத்திரை நடிகை நிலானி. பின்னர் தலைமறைவான அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இளைஞர் ஒருவருடன் அவர் பழக, அந்த இளைஞரால் பாதிக்கப்பட்டு அவரை விட்டு விலகினார்.
இதனால் அந்த இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அதற்கு நிலானியைக் குற்றம் சாட்டியதற்கு அழுதுகொண்டே அவர் தன்னிலை விளக்கம் கொடுத்தது அப்போது பரபரப்பானது. பின்னர் அவரும் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.
பின்னர் சிறிது காலம் அவர் என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இன்று திடீரென காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் ஒன்றை அளித்தார்.
பின்னர் நிலானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கடந்த ஆண்டு நடந்த சம்பவம் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. என்னைக் கேவலப்படுத்தி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் நான் குழந்தைகளோடு நடுத்தெருவுக்கு வந்தேன். சமூக வலைதளத்தில் என்னுடைய செல்போன் எண் வெளியானது. அதன் மூலமாக என் நிலை அறிந்து உலகம் முழுவதும் இருந்து பலர் உதவி செய்தனர்.
அப்படி உதவி செய்ததில் ஒருவர் என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவெடுத்தேன். ஆனால் அந்த நபர் உடனே திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தினார். அவரைப் பற்றி விசாரித்த போது அந்த நபருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி விட்டது தெரியவந்தது. அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்பதும் தெரிந்தது.
இதையடுத்து அந்த நபரிடமிருந்து விலகினேன். அந்த நபர் என்னை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் என்னுடைய செல்போன் எண்ணை அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனால் தினமும் எனக்கு ஆபாச எஸ்எம்எஸ்கள் வருகின்றன.
என்னை மிரட்டுகிறார்கள். பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் ஆபாசமாகப் பேசுகிறார்கள். என்னுடைய செல்போனை யாரோ ஹேக் செய்துள்ளனர். எனக்குத் தெரியாமலேயே என்னுடைய போன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நான் தனியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்து போனதால் அடையாளம் தெரியாத பலர் தொல்லை கொடுக்கிறார்கள். அது தொடர்பாகப் புகார் கொடுக்க வந்துள்ளேன்.
என்னுடைய படத்தை மார்ஃபிங் செய்து ஆபாசப் படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டுகிறார்கள். ஏற்கெனவே என்னுடைய பெயர் கெட்டுப் போய் உள்ளது. ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கியதால் என் பேச்சை யார் நம்புவார்கள். எனது நிலையை விளக்கி என்னைக் காப்பாற்றிக் கொள்ள சட்ட உதவியை நாடி வந்துள்ளேன்.
ஜனநாயக மாதர் சங்கத்தின் துணையோடு புகார் கொடுக்க வந்துள்ளேன். தினமும் எனக்கு 500 செல்போன் அழைப்புகள் வருகின்றன. எல்லாமே ஆபாச வார்த்தைகளால் மிரட்டுகிறார்கள். என்னை மிரட்டும் நபர் குறித்த அடையாளத்தையும் பெயரையும் வெளியிட விரும்பவில்லை.
அந்த நபர் என்னைத் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்துகிறார். ஏற்கெனவே ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு நீ தான் காரணம் என வெளியிடுவேன் என மிரட்டுகிறார்.
நான் யாருடனும் பழகவில்லை. ஏற்கெனவே நடந்த சம்பவத்தால் எனக்கு சினிமா வாய்ப்பு வராமல் போய் விட்டது''.
இவ்வாறு நிலானி தெரிவித்தார்.
பின்னர், தன்னை ஏமாற்றி தனது புகைப்படங்களை மார்ஃபிங் செய்து வெளியிடுவேன் என மிரட்டி, தனது செல்போன் எண்ணைப் பலரிடமும் பகிர்ந்த நபர் மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.