

கோவையில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா நடப்பதாக மேயர் பதவிக்கான பாஜக வேட்பாளர் நந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை சித்தா புதூர் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உடன் இருந்த கோவை மேயர் பதவிக்கான பாஜக வேட்பாளர் ஆர்.நந்தகுமார் கூறியதாவது:
கவுண்டம்பாளையம், ஹவுஸிங் யூனிட் அருகே வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா நடைபெற்றது. அதை கட்சியினர் வீடியோ படம் பிடித்தனர். பணம் பட்டுவாடா செய்வதைத் தடுத்து அதைப் பறிமுதல் செய்து போலீஸிலும் புகார் செய்துள்ளோம். பணத்தைப் போலீஸிலேயே ஒப்படைக்க உள்ளோம். பணம் பட்டுவாடா செய்வதை தொண்டர்களுடன் சேர்ந்து நானும் படம் பிடித்தபோது வெளியூர் எம்எல்ஏ ஒருவர் அங்கிருந்தார். அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அது குறித்து போலீஸில் புகார் செய்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
பிடிபட்ட பணம், பணப்பட்டுவாடா செய்தவர்களிடம் இருந்த பூத் சிலிப்கள், வாக்காளர் பட்டியல்கள் ஆகியவற்றை செய்தியாளர்களிடம் நந்தகுமார் காண்பித்தார்.