

பாசமுள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார். கருணை கொண்ட நெஞ்சினிலே அவர் கோயில் கொள்கிறார்… கவியரசரின் வார்த்தைகளின் ஆழத்தை அதை உணர்ந்தவராலேயே முழுவதும் உணர முடியும். மரணத்துக்கு பிறகும் தனது கண்களை தானமாக அளித்ததன் மூலம் இருவருக்கு பார்வையளித்துள்ள 80 வயது மூதாட்டி, இன்று அவர்கள் வாழ்க்கையில் தெய்வம்தானே!
வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லி விட்டு போகும் எத்தனையோ பேரை பார்த்த பூமி இது. வாழ்ந்து முடித்துவிட்ட பின்னரும் இளம் சந்ததிகளுக்கு தன் பார்வையை அளித்துச் சென்ற அந்த தெய்வம் ஏற்படுத்திய விழிப்புணர்வு சமூகத்துக்கு பலமான அடித்தளம்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையை அடுத்த கண்டன்விளையை சேர்ந்தவர் பிரான்சிஸ். வயோதிகத்தால் கண்பார்வை இழந்து தனது 81-வது வயதில் மரணம் அடைந்தார். இவரது மனைவி ஞானசெல்வம் (80). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள்.
சமீபத்தில் ஞானசெல்வம் இறந்துபோனார். அடுத்த 40 நிமிடத்தில் நாகர்கோவில் பெஜன்சிங் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழு கண்டன்விளை விரைகிறது. மூதாட்டி ஞான செல்வத்தின் வாரிசுகள் சம்மதத்துடன், அவரின் கண்களின் கருவிழிகள் பத்திரமாக சேகரிக்கப்படுகின்றன. அவற்றை பார்வையற்ற இரு இளைஞர்களுக்கு பொருத்தப் போவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பக்கத்தில் நின்ற ஞானசெல்வத்தின் மகன் ஜோசப் அற்புதத்தின் (45) கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்கிறது. உணர்வுகளை அடக்கிகொண்டு அவர் தி இந்து நாளிதழிடம் கூறும் போது, `எனது தந்தை கண் பார்வையின்றி அவதிப்பட்டு இறந்ததை அருகிலிருந்து பார்த்தவர் எங்கள் தாய். லயன்ஸ் சங்கத்தில் நான் பொறுப்பில் இருந்ததால் கண்தானம், ரத்ததான விழிப்புணர்வில் அக்கறை காட்டி வந்தேன். இவற்றையெல்லாம் கவனித்த எனது அம்மா, `மண்ணோடு மக்கிபோகும் கண்ணால.... இரண்டு பேருக்கு பார்வ கெடச்சா புண்ணியம்ணு’ 3 வருசமா, சொல்லிகிட்டு இருந்தாங்க. இதனாலத்தான் அவங்க இறந்ததும் முறைப்படி கருவிழிகளை எடுக்க ஏற்பாடு செய்தோம்’ என்றார்.
அரிய விழிப்புணர்வு
ஞானசெல்வம் பாட்டி இறந்ததற்கு துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரிடமும், அவர் கண்தானம் செய்தது குறித்த பேச்சுதான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
இறந்த பின்பு உடல் உறுப்புகளை தானம் செய்ய யோசிக்கும் பல ஆயிரம் பேருக்கு மத்தியில் ஞானசெல்வம் பாட்டியின் கண்தான விழிப்புணர்வு அளவிட முடியாதது. இதன் பின்னணியில் அவரது குழந்தைகளின் ஊக்கமும், ஆர்வமும் உள்ளது.
மைல் கல்
நாகர்கோவில் லயன்ஸ் சங்க வட்டார தலைவர் அருள்கண்ணன் கூறும்போது, `தென்மாவட்டங்களில் கண் தானம் வழங்குவதில் குமரி மாவட்ட மக்களிடையே சற்று ஆர்வம் குறைந்திருப்பதாக கூறப்பட்டது எங்களுக்கு சற்று நெருடலை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது அதிகமானோர் ரத்ததானம், கண்தானம் செய்து வருகின்றனர். அனைத்துக்கும் மேலாக ஜோசப் அற்புதத்தின் தாயார் ஞானசெல்வத்தின் கண்தானம் கிராமப்புறங்கள் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தபின்பு தங்கள் கருவிழிகள் மட்டுமே எடுக்கப்படுகிறது என்பது பள்ளி, கல்லூரி மாணவர்களின் மனதில் பதியவேண்டும். இதனால் எந்த பாதிப்பும், மாற்றமும் ஏற்படுவதில்லை. உயிர் பிரிந்து 40 நிமிடத்தில் கண்தானம் செய்த ஞானசெல்வம், உடல் உறுப்புதான நிகழ்வில் ஒரு மைல் கல்லாகி விட்டார் என்றார். ஞானசெல்வம் பாட்டி மறைந்தாலும் அவரது கண்கள் இருவரிடத்தில் இன்னும் பல்லாண்டு வாழப்போகிறது.