ஜெயலலிதா கைது: தீக்குளித்த மதுரை மாணவி உயிரிழப்பு

ஜெயலலிதா கைது: தீக்குளித்த மதுரை மாணவி உயிரிழப்பு
Updated on
1 min read

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து மதுரை அருகே தீக்குளித்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி மாணவி நாகலட்சுமி (வயது 17) இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள வங்கிநாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். மனைவி அழகம்மாள். கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன்கள் கூலி வேலை செய்கின்றனர். இவர்களது மகள் நாகலட்சுமி அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

காலாண்டு தேர்வு விடுமுறையால் வீட்டில் இருந்த அவர் சனிக்கிழமை டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட தகவல் ஒளிபரப்பானது. இதை கேட்ட அவர் மனமுடைந்தார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வேலைக்கு சென்றபின் வீட்டில் இருந்த அவர் மண்ணெண்ணெய்யை தன் உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதை கண்ட அருகில் வசிப்பவர்கள் உடனடியாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடலில் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மாணவி நாகலட்சுமி சிகிச்சைப் பலனின்றி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.15 மணிக்கு உயிரிழந்தார்.

ஜெயலலிதா மீது நல்லெண்ணம் கொண்ட மாணவி நாகலட்சுமி, இலவச சைக்கிள் உள்ளிட்ட மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களால் பயனடைந்தவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in