Published : 14 Sep 2014 12:23 PM
Last Updated : 14 Sep 2014 12:23 PM

பொதுப்பிரிவு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை: அண்ணாமலை பல்கலை.க்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

69 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத் தப்பட்ட காரணத்தால் பாதிக்கப்பட்ட பொதுப் பிரிவு மாணவருக்கு எம்.பி.பி.எஸ். இடம் ஒதுக்குமாறு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கே.வைத்தி விஸ்வநாத் என்ற மாணவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத் தேர்வில் நான் 1200-க்கு 1154 மதிப்பெண்களும், எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்காக 200-க்கு 197.50 கட்-ஆப் மதிப்பெண்களும் பெற்றிருந்தேன். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியான ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்வ தற்காக விண்ணப்பித்திருந்தேன். மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீடு மட்டும் அமல்படுத்தப்பட்டிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த எனக்கு எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்திருக்கும். ஆனால் 69 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் எனக்கு இடம் கிடைக்கவில்லை.

அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். சேர தகுதியிருந்தும் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் காரண மாக பாதிக்கப்படும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுக ளாக தமிழ்நாட்டில் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்பட்டு, பாதிக்கப்படும் பொதுப் பிரிவு மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆகவே, அங்கு அமல்படுத் தப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட எனக்கு எம்.பி.பி.எஸ். இடம் அளிக்கும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கூடுதல் இடத்தை உருவாக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தனது தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிமன்றம் விசாரணை

இந்த மனு மீது நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரணை மேற்கொண்டார். அப்போது, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கக் கூடிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இப்போதும் சுய நிதிக் கல்லூரி யாகவே கருதப்பட வேண்டும். ஆகவே, பொதுப் பிரிவு மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் கூடுதல் இடங்களை உருவாக்குவது போல ராஜா முத்தையா கல்லூரியில் கூடுதல் இடங்களை உருவாக்க முடியாது என பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.

இது தொடர்பாக இம்மாதம் 11-ம் தேதி அவர் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

கடந்த 2013-ம் ஆண்டின் சட்டப்படி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அனைத்து நிர்வாகங் களும் தற்போது தமிழக அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டன. அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக் கூடிய ஒரு கல்லூரியில் உள்ள அனைத்து இடங்களும் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களாகவே கருதப்படும். இந்நிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுயநிதி கல்லூரி என கூறுவதை ஏற்க இயலாது.

உத்தரவு

ஆகவே, 50 சதவீத இடஒதுக்கீடு மட்டும் அமல்படுத்தப்பட்டிருந்தால் மனுதாரருக்கு எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்திருக்கும் எனில், தற்போது எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அவருக்கு உரிமை உள்ளது. ஆகவே, அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் இது தொடர்பாக ஆராய்ந்து ஒரு வார காலத்துக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x