Published : 13 Sep 2014 09:28 AM
Last Updated : 13 Sep 2014 09:28 AM

பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் உளவியல் நிபுணர்களை நியமிக்க உத்தரவு: மாணவர்கள் மனஉளைச்சலை தடுக்க அரசு ஏற்பாடு

மனஉளைச்சலுக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக அனைத்து பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உளவியல் ஆலோசகர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரிகளில் சேரும் மாணவ-மாணவிகள் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மாற்றத்துக்கு உள்ளாகிறார்கள். புதிய சூழல், படிப்பு சுமை, இளம் வயதுக்கே உரித்தான காதல் விவகாரம் போன்ற பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படக்கூடும்.

விரக்தியின் உச்சகட்டத்துக்கு செல்லும் ஒருசிலர் அவசர கதியில் தற்கொலைக்கு முயற்சிப்பதும் உண்டு. கல்லூரிகளில் குறிப்பாக தொழில்நுட்ப கல்லூரிகளில் இதுபோன்ற தற்கொலை முயற்சி சம்பவங்கள் நிகழ்ந்ததை தொடர்ந்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை அளிக்க முடிவுசெய்துள்ளது.

உளவியல் நிபுணர்கள் நியமனம்

இதற்காக ஒவ்வொரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், பொறியியல் கல்லூரியிலும் உளவியல் நிபுணர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. படிப்பு அல்லது காதல் விவகாரங் களில் சிக்கி மனஉளைச்சலுக்கு உள்ளாகும் மாணவ-மாணவி களுக்கு உளவியல் நிபுணர்கள் ஆலோசனையும் அறிவுரையும் வழங்குவர்.

மேலும், அவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அளித்து மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டவும் செய்வர். தமிழ்நாட்டில் 501 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும், 550 பொறியியல் கல்லூரிகளில் ஏறத்தாழ 7 லட்சம் பேரும் பயில்கிறார்கள்.

பணிகள் தீவிரம்

அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் உளவியல் நிபுணர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருவதாக மாநில தொழில்நுட்பக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x