Published : 04 Sep 2014 12:35 PM
Last Updated : 04 Sep 2014 12:35 PM

எட்டு மாதத்தில் 45 கொலைகள்: அதிர்ச்சியில் காவல்துறை; நடுக்கத்தில் மக்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த எட்டு மாதங்களில் 45 கொலைகள் நடந்துள்ளதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

திண்டுக்கல் என்றால், பூட்டு, பிரியாணி என்ற நிலைமாறி தற்போது கொலை, கொள்ளைக்கு பெயர்பெற்ற நகரமாகி விட்டது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 45 கொலைகள் நடந்துள்ளன.

ஜனவரி மாதத்தில் 2 பேர், பிப்ரவரியில் 5 பேர், மார்ச்- 5 பேர், ஏப்ரல்- 6 பேர், மே மாதம் 7 பேர், ஜூன் -6 பேர், ஜூலை- 6 பேர், ஆகஸ்ட் - 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை பழநியில் பொதுமக்கள் முன்னிலையில் 2 பேரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு சாவகாசமாக தப்பியது. மற்றொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் நடந்தபோது, பழநியில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., எஸ்.பி., மற்றும் 700 போலீஸார் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதுகாப்புக்காக முகாமிட்டிருந்தனர். இந்த நேரத்திலேயே இரட்டைக் கொலை நடந்ததால், உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பழநியில் ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதம் பெண் பள்ளித் தாளாளர் உள்பட இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடைய மற்றொருவர் மறுநாள், தனியார் தோட்டத்தில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

கடந்த மாதம் திண்டுக்கல் சிறைச்சாலையின் பின்புறம் ரவுடி ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். கடந்த இரு மாதங்களுக்கு முன் பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் ஆஜராக வந்த தூத்துக்குடி சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் மீது, போலீஸார் கண் எதிரிலேயே காரில் வந்த கும்பல் வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியது. இதில் நூலிழையில் பண்ணையார் ஆட்கள் உயிர் தப்பினர்.

கடந்த ஆண்டு, நீதிமன்ற வாயிலில் இதே வழக்கில் ஆஜராக வந்த பண்ணையார் ஆதரவாளர் முத்துபாண்டி என்பவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் தப்பிய அவர், மதுரையில் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுபோல கொலை, கொள்ளைச் சம்பவங்களும், வெடிகுண்டு கலாச்சாரமும் திண்டுக்கல் நகரில் அதிகரித்து வருகிறது.

நகர், கிராமப்புறங்களில் நடக்கும் அடிதடி சாதாரண தகராறு, முன்விரோதம் உள்ளிட்ட பிரச்சினைகளில் போலீஸார் முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அதனால், சாதாரண பிரச்சினைகள் கூட, பெரிதாக வளர்ந்து தொடர் கொலைகள் நடப்பதால் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியது ‘‘பழநி இரட்டைக் கொலையில் 2 பேரைப் பிடித்துள்ளோம். இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறுதான், இந்தக் கொலைக்குக் காரணம். இதுபோன்ற சிறுசிறு பிரச்சினைகளில் ஏற்படும் கொலைகளைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x