

கள்ளக்குறிச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீட்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தாள்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பள்ளகச்சேரி அருகே காட்டுகொட்டாய் பகுதியில் ராமச்சந்திரன் என்பவரது நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் அவரது 3 வயது மகள் மதுமிதா தவறி விழுந்தாள். முதலில் குழந்தை 8 அடியில் இருந்து 10 அடி ஆழத்துக்குள் சிக்கி இருப்பதாக கருதப்பட்டதால் சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்படாமல் இருப்பதற்காக தொடர்ந்து சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் கிணற்றுக்குள் செலுத்தப்பட்டது. ஆனால், சிறுமி ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் மேலும் கீழ்நோக்கி தோண்டப்பட்டது.
காலை 10 மணிக்கு, 15 அடி ஆழத்தில் தோண்டும்போது பாறை ஒன்று குறுக்கிட்டது. இதனால் பொக்லைன் இயந்திரத்தால் சரியாகத் தோண்ட முடியவில்லை. அதனால் பாறைகளையும் தோண்டி எடுக்கும் சக்தி கொண்ட பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தோண்டும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே திருச்சி டேனியல், மதுரை மணிகண்டன், கோவை தர் ஆகியோர் தலைமையில் தலா 5 பேர் கொண்ட குழுவினரும், அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் தடுப்புப் படையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து, தீயணைப்பு படையி னர் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 4 பொக்லைன் இயந்திரங் கள் மூலம் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டு 27 அடி ஆழத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சிறுமி மதுமிதா மீட்கப்பட்டாள்.
16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சனிக்கிழமை காலை 10 மணிக்குதான் சிறுமியை தீயணைப்புத்துறையினரால் மீட்கமுடிந்தது. மீட்கப்பட்ட சிறுமி அவசர ஊர்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.
மயக்க நிலையில் இருந்த சிறுமி மதுமிதாவுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் சிறுமியின் உடல் இல்லை. எவ்வளவோ முயற்சித்தும் சிறுமியின் உயிரை காப்பாற்ற இயலவில்லை என்று டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்.
கிணற்றிலேயே உயிரிழந்ததா?
சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் 27 அடி ஆழத்தில் விழுந்த சிறுமி பிற்பகல் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதை வெளியிட்டால் பதற்றமான சூழல் உருவாகும் என கருதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறுமி மீட்கப்பட்ட பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. சிறுமி இறந்ததை உறுதி செய்துகொண்ட அரசு அலுவலர்கள் இரவு 10 மணிக்கு புறப்பட்டு சென்றனர். இறுதிவரை காவல் துறையினரும், மீட்பு குழுவினரும், பொதுமக்களும் மட்டுமே அங்கு இருந்தனர்.