

தருமபுரி அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் பாய்ந்து சென்று லாரி மீது மோதியதில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாயினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போசி நாயனஅள்ளியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (31). இவரது தம்பி மனைவிக்கு தருமபுரி தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையைப் பார்க்க விஜயகுமார் தன் மனைவி நித்யா (28), உறவினர் கவுதம்மாள் (50), குழந்தைகள் கிரிஜா (10), விஷால் (8) ஆகியோருடன் நேற்று காரில் தருமபுரி சென்று கொண்டிருந்தார்.
தருமபுரி மாவட்டம் குண்டலப் பட்டி பகுதியில் மதிகோன் பாளையம் காவல்நிலையம் அருகே சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியன் மீது மோதியதால் 7 அடி உயரத்துக்கு பறந்த கார், சாலையின் மறுபக்கத்துக்குச் சென்றது.
அப்போது எதிரே நாமக்கல்லில் இருந்து ஒசூர் நோக்கி வந்துகொண்டிருந்த கோழிக்குஞ்சு பாரம் ஏற்றும் லாரியின் முன்பக்கத்தில் மோதி கார் நொறுங்கியது.
காரில் இருந்த விஜயகுமார், நித்யா, கவுதம்மாள் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். குழந்தைகள் கிரிஜா, விஷால் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர்.
விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.