Published : 10 Mar 2018 10:14 AM
Last Updated : 10 Mar 2018 10:14 AM

விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் எழுதிய ‘மூன்றெழுத்து அதிசயம் எம்ஜிஆர்’ நூல் வெளியீடு: எம்ஜிஆருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்

விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் எழுதிய ‘மூன்றெழுத்து அதிசயம் எம்ஜிஆர்’ என்ற நூலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று வெளியிட்டார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் எழுதி, தி இந்துவின் ‘தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ‘மூன்றெழுத்து அதிசயம் எம்ஜிஆர்’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. விஐடி பல்கலை அண்ணா அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நூலை வெளியிட்டார்.

பின்னர் ஆளுநர் புரோஹித் பேசும்போது, ‘ஆட்சிக் காலத்தில் நிறைய திட்டங்களை எம்ஜிஆர் கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் அவர் பொன்மனச் செம்மல் என அழைக்கப்பட்டார். எம்ஜிஆருக்கு நாட்டுப்பற்று அதிகம். தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம், மதுரையில் உலகத் தமிழ் மாநாடு, அரசு அலுவலகங்களில் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது, இலங்கை தமிழர்களின் நலனுக்காக பாடுபட்டது முக்கிய நிகழ்வுகள்’ என்றார்.

நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் நூல் ஏற்புரையாற்றியபோது, ‘1984-ல் எம்ஜிஆரால் தூவப்பட்ட விதைதான் வேலூர் பொறியியல் கல்லூரியாக தொடங்கி, இன்று விஐடி பல்கலைக்கழகமாக மாறியது. எம்ஜிஆருக்கு கொடுத்துதான் பழக்கம். தமிழகத்தில் பரம்பரை மணியக்காரர் முறையை ஒழித்து அனைத்து ஜாதியினரும் கிராம நிர்வாக அலுவலராகும் வாய்ப்பை ஏற்படுத்தியர் எம்ஜிஆர்தான். பாரதியார், பாரதிதாசன், அன்னை தெரசா பல்கலைக்கழகங்களை ஏற்படுத்தினார்.

தமிழகத்தில் அதிக பள்ளிகளைத் திறந்தவர் காமராஜர். அந்தப் பள்ளிகளுக்கு அதிக மாணவர்களை வரவழைத்தவர் எம்ஜிஆர். பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிகப் பெரிய சீர்திருத்தம். ஆனால், கறுப்புப் பணத்தை ஒழிக்க 100 ரூபாய் நோட்டை ஒழிக்க வேண்டும் என்று அன்றே சொன்னவர் எம்ஜிஆர்’ என்றார்.

முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன் நான். என்னை வாழ வைத்த தெய்வமும் அவர்தான்.

எம்ஜிஆர்தான் என்னை படிக்க வைத்தார். கல்லூரி மாணவர் மன்றத் தேர்தலில் என்னை நிற்க வைத்து வெற்றி பெறச் செய்ததும் அவர்தான்’’ என்றார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், நடிகர் ராமராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எம்ஜிஆரின் குடும்பத்தினரை ஆளுநர் கவுரவித்தார். முடிவில், ‘தி இந்து’ தமிழ் வணிகப் பிரிவுத் தலைவர் சங்கர் ஆர்.சுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x