Published : 03 Mar 2018 08:27 AM
Last Updated : 03 Mar 2018 08:27 AM

‘கபாலி’ படம் வெளியிட்டதால் ரூ.2.77 கோடி நஷ்டம்: தயாரிப்பாளர் தாணு மீது விநியோகஸ்தர் புகார்

‘கபாலி’ படத்தை வெளியிட்டதால் ரூ.2.77 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், படத்தை திரையிட முன்பணமாக செலுத்திய ரூ.1.50 கோடியை திருப்பித் தராமல் தயாரிப்பாளர் தாணு இழுத்தடிப்பதாகவும் ஜி.பி.செல்வகுமார் என்ற விநியோகஸ்தர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திரைப்பட விநியோகஸ்தர் ஜி.பி.செல்வகுமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :

6 கோடிக்கு ஒப்பந்தம்

ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தை தென் ஆற்காடு, பாண்டிச்சேரி பகுதிகளில் வெளியிட தயாரிப்பாளர் தாணுவிடம் ரூ.6 கோடிக்கு ஒப்பந்தம் போட்டோம். பல இடங்களில் கடன் பெற்று ரூ.5.5 கோடி பணத்தைக் கொடுத்து படத்தை பெற்றேன். அதில் ரூ.2.77 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இந்த விஷயத்தை தயாரிப்பாளர் தாணுவிடம் தெரிவித்தேன். அவரும், நான் முன் பணமாக செலுத்திய ரூ.1.5 கோடியை திரும்ப கொடுப்பதாக தெரிவித்தார். 20 மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை பணம் கொடுக்கவில்லை. அதனால்தான் ‘மக்களை காப்பாற்றுவதாக தெரிவித்துள்ள ரஜினி, பட விநியோகஸ்தரை காப்பாற்ற மாட்டாரா?’ என்பது போன்ற வாசகம் அடங்கிய போஸ்டர் நகரில் ஒட்டப்பட்டது.

ரஜினியிடம் முறையிடுவேன்

நான் பல இடங்களில் கடன் வாங்கியே பணத்தை கட்டினேன். இப்போது கடன் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் நிற்கிறேன். தயாரிப்பாளர் தாணு பணத்தை கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. விரைவில் ரஜினியை சந்தித்து முறையிடவும் தயாராக உள்ளேன்.

இவ்வாறு விநியோகஸ்தர் செல்வகுமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x