Published : 18 Apr 2014 11:01 AM
Last Updated : 18 Apr 2014 11:01 AM

வாக்குச்சாவடிகள் அருகில் வசிக்கும் 1.2 லட்சம் பேரின் தொலைபேசி எண்கள் சேகரிப்பு

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் அருகில் வசிக்கும் சுமார் 1.2 லட்சம் பேரின் தொலைபேசி மற்றும் செல்பேசி எண்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தேர்தல் பணிக்கு வராத அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், எஸ்எஸ்எல்சி விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்து வருவதால், ஆசிரியர்கள் அனுமதிக்கடிதம் இருந்தால் மட்டுமே தேர்தல் பணிக்குச் செல்லவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, அத்துறையினரிடம் பேசியுள்ளோம். எஸ்எம்எஸ் தகவலைக் காட்டினாலேயே ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு அலுவலர் இருப்பார்கள். 1200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கும் சாவடிகளில் மட்டும் 5 பேர் பணியில் இருப்பார்கள். வாக்காளர் அத்தாட்சி சீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் மத்திய சென்னையில் 5 பேர் பணியில் இருப்பார்கள்.

வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடியில் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக, அதன் அருகில் உள்ள 2 வீடுகளில் இருந்து தொலைபேசி அல்லது செல்பேசி எண்ணை வாங்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 60 ஆயிரத்து 816 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின்போது அசம்பாவிதமோ, வேறு ஏதோ சம்பவங்களோ நடப்பதாக தகவல் வந்தால் தேர்தல் துறையினர் அந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள இது உதவும். அரசியல் தொடர்புடையவர்களின் எண்களை பெறமாட்டோம். இதற்காக தலைமைச் செயலகத்தின் 2-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கு, கட்டுப்பாட்டு அறையாக மாற்றப்பட்டுவருகிறது.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

வீடியோ கான்பரன்சிங்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வியாழக்கிழமையன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரவீண்குமார் தேர்தல் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரத்தில், வாக்குச்சீட்டு பொருத்தும் பணிகள், ‘பூத் ஸ்லிப்’ வழங்கும் பணிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x