Last Updated : 26 Mar, 2018 10:18 AM

 

Published : 26 Mar 2018 10:18 AM
Last Updated : 26 Mar 2018 10:18 AM

பூத்துக் குலுங்கும் சாமந்திப் பூக்கள் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், கடம்பத்தூர், பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் மல்லிகை, சம்பங்கி, சாமந்தி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் கணிசமான அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல், ஜனவரி வரை சாமந்திப் பூக்கள் பயிரிடப்படுவது வழக்கம். அவ்வாறு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை பயிரிடப்பட்ட சாமந்தி செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இதுகுறித்து, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வீரராகவன் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் 50 ஏக்கருக்கும் மேல் சாமந்திப் பூக்கள் ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறது. மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் திருப்பேடு உள்ளிட்ட கிராமங்களில் 5 ஏக்கரில் சாமந்தி பயிரிடப்பட்டுள்ளது. ஓர் ஏக்கருக்கு நாற்று செலவு, பராமரிப்பு செலவு என ரூ.24 ஆயிரம் வரை செலவாகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் இருந்து, சாமந்தி நாற்றுகளை வாங்கி வந்து பயிரிட்டுள்ளோம். சாமந்திப் பூக்கள் பூத்துக் குலுங்குவது எங்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த பூக்களை ஒரு நாள் அல்லது 2 நாட்கள் இடைவெளியில் பறித்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் ஏக்கருக்கு 100 கிலோ முதல் 150 கிலோ வரை பூக்களைப் பறிக்கிறோம். அறுவடையின் முடிவில் சராசரியாக ஏக்கருக்கு 6 டன்னுக்கு மேல் சாமந்திப் பூக்கள் கிடைக்கலாம்.

தற்போது கிலோ ரூ.40-க்கு கொள்முதல் செய்கின்றனர். சாகுபடி முடிவடைய இன்னும் சில மாதங்கள் உள்ளதால் கொள்முதல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு கொள்முதல் விலை அதிகரித்தால் எங்களுக்கு ஏக்கருக்கு சுமார் ரூ.40 ஆயிரம் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x