Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM

அதிமுக வேட்பாளர் சிபாரிசில் குளறுபடி- ஜெயலலிதாவே நேர்காணல் நடத்தக் கோரிக்கை

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அதிமுக மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் தொகுதிக்கு 3 பேரை தலைமைக்கு சிபாரிசு செய்ததில் புகுந்து விளையாடிவிட்டதாக புலம்பல்கள் கேட்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒவ்வொரு தொகுதியிலுமிருந்து தலா 3 நபர்களை சிபாரிசு செய்யும்படி மாவட்டச் செயலாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தி இருந்தார் ஜெயலலிதா. இதன்படி மாவட்டங்களும் அமைச்சர்களும் தலா 3 நபர்களை தலைமைக்கு சிபாரிசு செய்திருக்கிறார்கள். இதில்தான் ஏகப்பட்ட தில்லு முல்லுகள் நடந்திருப்பதாக சொல் கிறார்கள்.

இதுகுறித்து அதிமுக தலைமை நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் புள்ளிவிவரத்துடன் பேசினார். “அரசுப் பதவிகள் ஏதும் இல்லாத கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் பெயர்களை சிபாரிசு செய்யுங்கள் என்றுதான் அம்மா சொல்லி இருந்தார். ஆனால், பல மாவட்டங்களில் முக்கிய நபர்களை ஓரங்கட்டிவிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ராஜ்ய சபா வேட்பாளர் மாற்றத்தில் நடந்த குளறுபடிக்கும் இதுதான் காரணம்.

காண்ட்ராக்டரை சிபாரிசு செய்த அமைச்சர்

காவிரிக் கரையோரம் உள்ள ஒரு தொகுதியில் சிட்டிங் எம்.பி-யாக உள்ளவர் பெயரையே எழுதிக் கொடுக்கவில்லை. குறிப்பிட்டு அம்மா சொன்ன பிறகு, அவரது பெயரை சேர்த்திருக்கிறார்கள். இதேபோல் தென் சென்னையில் ஆதிராஜராம், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா பெயர்களும் லிஸ்டில் இல்லை. இதேபோல் கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர் தனக்கு சம்பாதித்துக் கொடுக்கும் காண்ட்ராக்டர் ஒருவரையும் சோழ மண்டல அமைச்சர் ஒருவர் தனது பினாமிகள் இருவரையும் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.

அம்மாவே நேர்காணல் நடத்த வேண்டும்

இதெல்லாம் அம்மாவுக்கு தெரியாது. முன்பெல்லாம் உளவுத் துறை மூலம் விசாரணை நடத்தப்படும். ஆனால், அதிமுக-வினர் பல இடங்களில் உளவுத் துறையோடும் உறவாடிக் கொண்டிருப்பதாக தகவல் வந்ததால் இப்போது உளவுத் துறை அறிக்கையும் அம்மா கேட்பதில்லை. இதுவும் சிலருக்கு வசதியாகிவிட்டது. இதை சரிசெய்ய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தொகுதிக்கு 20 பேரை வரவைத்து அம்மாவே நேர்காணல் நடத்தி தகுதியான நபர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய வேண்டும் இல்லாவிட்டால் நாகராஜ சோழன்களும் நிலமோசடி பேர்வழிகளும் பணத்தைச் சுரண்டும் காண்ட் ராக்டர்களும் வேட்பாளர் பட்டிய லுக்குள் வந்துவிடுவார்கள்’’ என்றார் அந்த நிர்வாகி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x