Published : 27 Sep 2014 09:33 AM
Last Updated : 27 Sep 2014 09:33 AM

கூட்டணியில் இருந்து நாங்களாக யாரையும் வெளியேற்ற மாட்டோம்: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா, ஈரோட்டில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் அயல்நாடுகளுடனான உறவு குறித்த நிலையான கொள்கை எதுவும் இல்லை. மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்ததும் சார்க் நாடுகளை அழைத்து, அதன் மூலம் எங்கள் நிலைப்பாட்டை புரிய வைத்தோம். இந்தி பேசும் மாநிலங்களின் வளர்ச்சியை மட்டும் இந்த அரசு கருத்தில் கொண்டு செயல்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளது பொறுப்பற்ற பேச்சு; முழு பொய். நாட்டில் நடந்துள்ள அனைத்து மெகா ஊழல்களிலும் சிதம்பரமும், அவரது குடும்பத்தினரும் சம்பந்தப்பட்டுள்ளது வெளியாகி வரும் நிலையில், அதிலிருந்து திசை திருப்ப அவர் இவ்வாறு பேசுகிறார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அராஜகங்களை நடத்தியுள்ளது. திமுக ஆட்சியில் திருமங்கலம் பார்முலா என்றால், இவர்கள் ஆட்சியில் வேட்பாளரை வளைக்கும் திருநெல்வேலி பார்முலா, வேட்பு மனு தாக்கல் செய்ய விடாத புதுக்கோட்டை பார்முலா என பல புதிய முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு வழங்கும் ஆவின் பாலில் கலப்படம் செய்யும் செயல் இந்த ஆட்சியில் நடந்துள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்த மாநில கட்சிகள் வீழ்ச்சியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளன. மின் பற்றாக்குறையால் தொழில்துறை ஸ்தம்பித்து, பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது.

ராஜபக்சவை கண்டித்து திமுக நடத்திய கருப்புக்கொடி, கருப்புச்சட்டை போராட்டத்தை மக்கள் ஆதரிக்கவில்லை. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பாரதிய ஜனதா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மீனவர் அமைப்பின் பிரதிநிதிகளுடன் எங்கள் கட்சிக் குழு பேச்சு நடத்தியபின், இரட்டை மடி வலைகளை தவிர்த்து மீன் பிடிக்கும் வகையில், மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன் பிடிக்கும் வசதியை செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இலங்கை விவகாரத்தில் புரிதல் குறைவாக உள்ளது. அவர்களுக்கு புரிய வைக்கவும் முயற்சி நடந்து வருகிறது. தற்போதைய கூட்டணி தொடர்கிறது. கூட்டணியில் இருந்து நாங்களாக யாரையும் வெளியேற்ற மாட்டோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x