பெரியார் சிலை குறித்த சர்ச்சைப் பதிவு: ஹெச்.ராஜா வருத்தம்

பெரியார் சிலை குறித்த சர்ச்சைப் பதிவு: ஹெச்.ராஜா வருத்தம்
Updated on
1 min read

பெரியார் சிலை குறித்து  பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து  தெரிவித்ததற்காக பாஜக தேசியச் செயலாளர்  ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் பெலோனியா கல்லூரி சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலையை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பாஜக ஆதரவாளர்கள் அகற்றினர்.

இந்நிலையில் இது குறித்து பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''லெனின் யார் அவருக்கு இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை'' என்று பதிவிட்டிருந்தார்.

ஹெச். ராஜாவின் இந்தப் பதிவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தனது கருத்திற்காக  ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வருத்தம் தெரிவித்த்துள்ளார்.

இதுகுறித்து  அவர் கூறியுள்ளதாவது:

‘‘நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் நிர்வாகி, எனது அனுமதி இன்றி பதிவு செய்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல.

ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இனைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது" என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in