Published : 04 Sep 2014 12:26 PM
Last Updated : 04 Sep 2014 12:26 PM

இடைத் தேர்தல் அறிவிப்பில் வாக்காளர்களே இல்லாத வார்டு!

வாக்காளர்களே இல்லாத வார்டுக்கு தேர்தல் அறிவித்து அசத்தியிருக்கின்றனர் தேர்தல் அதிகாரிகள். அக்கம் பக்கம் உள்ள வார்டு மக்கள் இந்த அறிவிப்பால் அதிசயத்துப் போயிருக்கின்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் பிரஸ்காலனி என்பது 14வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கே வாக்காளர்களே இல்லாத நிலையில் இந்த வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் 18ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியம்? அதில்தான் அடங்கியிருக்கிறது வினோதம்.

இந்த வார்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இங்குள்ள அரசு அச்சக குடியிருப்பில் குடியிருந்தவர்கள். இந்த குடியிருப்பில், மத்திய அரசு நிறுவனமான இந்திய அரசு அச்சகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வசித்து வந்தனர். 2005 ஆம் ஆண்டு வாக்கில் இந்த ஊழியர்களுக்கு நிர்வாகம் தானாகவே முன்வந்து விருப்ப ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) அறிவித்தது. இத் திட்டத்தின்படி இந்த 14 வது வார்டில் வசித்து வந்த பெரும்பான்மையோர் பணியை ராஜினாமா செய்து குடியிருப்பு களையும் காலி செய்தனர். பிறகு எஞ்சியிருந்த சிலரும் சிறிது காலத்தில் ஓய்வு பெற்றதால் குடி யிருப்புகள் அனைத்தும் வெறிச் சோடின. தற்போது ஒரு வாக்காளர் கூட இல்லை. குடியிருப்பு அடுக்குமாடிக் கட்டிடங்களும் பாழடைந்து கிடக்கின்றன.

இந்த நிலையில்தான் மாநில தேர்தல் ஆணையம் எண்.4 வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டுக்கும் தேர்தல் அறிவித்துள்ளது.

இதுபற்றி இப் பேரூராட்சி தலைவர் ஜெயராமனிடம் கேட்ட போது, ‘கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த வார்டுக்கு இதே நிலைதான் நீடித்தது. அடுத்த தேர்தல்களிலும் இதே நிலைதான். எனவே அனைத்து வார்டுகளிலும் போதிய பிரதிநிதித்து வம் பெற வாக்காளர்கள் இல்லாத வார்டுகளை ஒருங்கிணைத்து சீர்படுத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளோம். ஆனாலும் இம்முறையும் 14 வது வார்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்காளர்களே இல்லை என்பதால் தற்போதும் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x